சனி, 28 நவம்பர், 2020

மக்கள் தலைவன்



மக்கள் தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும், நெருக்கடியான தருணத்தில் நாட்டையும் மக்களையும் எப்படி வழிநடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆக வாழ்ந்து காட்டியவர் ஸ்டாலின்.

ஜூன் 22, 1941 அன்று நாஜி ஜெர்மனி சோவியத் யூனியன் மீது தனது நாசகாரத் தாக்குதலைத் தொடங்கியது. மிக விரைவாக பல பகுதிகளைக் கைப்பற்றி பேரழிவை ஏற்படுத்தி முன்னேறியது ஜெர்மன் படை. அக்டோபர் 2, 1941 அன்று மாஸ்கோ நகரத்தின் மீது தனது முதலாவது தாக்குதலைத் தொடங்கியது.

மாஸ்கோ நகரத்தில் இருந்து முதியவர்கள், குழந்தைகள் எனப் பலரும் வெளியேற்றப் பட்டனர். நகரைப் பாதுகாப்பதற்குக் கடுமையான ஏற்பாடுகளை மேற்கொண்டது செம்படை. மாஸ்கோ நகர மக்கள் அனைவரும் இறுதி யுத்தத்திற்கு முழு வேகத்துடன் செம்படைக்கு உதவினர். தோழர் ஸ்டாலின் நகரப் பாதுகாப்புக்கான கமிட்டியின் கூட்டங்களில் கலந்து கொண்டு நேரடியாகத் தாக்குதலுக்கு வழிகாட்டினார். ஜெர்மன் விமானங்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போதிலும் நகரின் பல பகுதிகளுக்குச் சென்று போர் நடவடிக்கைகளை நேரடியாக ஆய்வு செய்தார். தினமும் தடுப்பு அரண்கள், பதுங்கு குழிகள் என ஒவ்வொன்றையும் பார்வையிட்டு தேவைப்பட்ட போது மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு உடனடி உத்திரவிட்டு நடைமுறைப் படுத்தினார். ஒரு சில இரண்டாம் நிலைத் தலைவர்கள் கூட மனமொடிந்து சோர்ந்து போன போதும், முழுமையான மன உறுதியுடன் செயல்பட்டார். நாம் தான் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயம் வேண்டாம் என்று மாஸ்கோ நகர மக்களுக்கு நேரடியாக அறிவுறுத்தினார்.

ஒரு கட்டத்தில் நிலைமை மோசமான போது அரசுத் தலைமையகத்தை குய்பிஷேவ் பகுதிக்கு மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்ட போதும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு இரண்டாம் நிலைத் தலைவர்களை அனுப்பி விட்டு தான் கடைசி வரையில் மாஸ்கோவில் மட்டுமே இருப்பது என்று உறுதியுடன் செயல்பட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நவம்பர் புரட்சி தினம் அன்று, இத்தனை அச்சுறுத்தல்களுக்கும் நடுவே மாஸ்கோ நகரில் படைகளின் வெற்றிப் பேரணியையும் நடத்தினார்!

இத்தகைய அசாதாரணச் செயல்களைச் செய்யக் கூடிய தலைவன் வேறு யாரும் இருக்க முடியாது.

இவை அனைத்துக்கும் மேலாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற பின்னர், அந்த வெற்றிக்குக் காரணம் ஸ்டாலின் தான் என்று சொன்ன போது அதை மறுத்து, இல்லை சோவியத் மக்கள் தான் வெற்றிக்குக் காரணம் என்று சொன்னார்!



திங்கள், 2 நவம்பர், 2020

டிராட்ஸ்கி குறித்து லெனின் மனைவி குரூப்ஸ்கயா

 


டிராட்ஸ்கியின் உண்மை முகம் பற்றி லெனினது மனைவி நதேழ்தா குரூப்ஸ்கயா எத்தகைய கருத்துக் கொண்டிருந்தார் என்பதை அறிவது ஆர்வமூட்டுவது ஆகும்.
“டிராட்ஸ்கியவாதிகளும் ஜினோவியவாதிகளும் வெகுஜனங்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. அவர்கள் யதார்த்த உலகத்தில் வாழவில்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் மிக முக்கியமான எதிரிகளான கெஸ்டபோவுடன் ஒரு ஒப்பந்தம் செய்வதன் மூலமாகக் கூட அதிகாரத்தை எவ்வாறு கைப்பற்றுவது என்பது பற்றி மட்டுமே அவர்கள் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். இதன் மூலம் சோவியத்துகளின் நாட்டில் உழைக்கும் மக்களின் மீது முதலாளித்துவ சுரண்டலையும் முதலாளித்துவ கட்டமைப்பையும் மீண்டும் ஸ்தாபிக்க முயற்சி செய்கிறார்கள்.
பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தின் சாரத்தை ஒருபோதும் புரிந்து கொள்ளாத டிராட்ஸ்கி, சோசலிசத்தை கட்டியெழுப்புவதில் மக்களின் பங்கு குறித்தும் புரிந்து கொள்ளவே இல்லை, இது ஒரு தற்செயல் நிகழ்வு கிடையாது.
மேலிருந்து உத்தரவிடுவதன் மூலம் மட்டுமே சோசலிசத்தைக் கட்டியெழுப்பி விட முடியும் என்று நினைத்து, இப்போது சோசலிசத்தை கட்டியெழுப்ப மக்களுக்கு உதவுகின்ற ஸ்டாலின், வோரோஷிலோவ் மற்றும் பொலிட்பீரோவின் மற்ற உறுப்பினர்களுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை ஒழுங்கமைக்கும் பாதையில் நிற்கிறார்.
ஆகவே, டிராட்ஸ்கி, கமெனேவ் மற்றும் ஜினோவியேவ் ஆகியோரின் கொள்கையற்ற கூட்டணி, லெனினது பணிகள், வெகுஜனங்களின் பணி, சோசலிச இலட்சியங்கள் ஆகியவற்றை முன்னெப்போதும் கேள்விப்பட்டிராதவாறு காட்டிக் கொடுக்கும் அளவுக்கு அவர்களை ஒரு படுகுழியில் இருந்து மற்றொரு ஆழமான படுகுழிக்குத் தள்ளி வருகிறது. இது தற்செயலானது அல்ல. டிராட்ஸ்கி, ஜினோவியேவ்,
கமெனேவ் மற்றும் அவர்களது கொலையாளிகள் குழு முழுவதும் ஜெர்மானிய பாசிஸ்டுகளுடன் இணைந்து செயல்பட்டன, கெஸ்டபோவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டன.” (Why is the Second International Defending Trotsky)
டிராட்ஸ்கியின் "பெருமை"களை எத்தனை சிறப்பாகக் கூறி இருக்கிறார் நதேழ்தா குரூப்ஸ்கயா!!!

போர் கமிசார் டிராட்ஸ்கி

சோவியத் உள்நாட்டுப் போர் காலத்தில் போர் கமிசார் ஆக இருந்தவர் டிராட்ஸ்கி.
அந்த வகையில் செஞ்சேனையின் தலைமை அதிகாரம் அவரிடம் இருந்தது என்று கூறலாம்.
அதனால் ஏதோ டிராட்ஸ்கி தான் மல்லாக்க விழுந்து கிடந்த சோவியத் யூனியனைத் தனியனாக இருந்து கொண்டு செங்குத்தாகத் தூக்கி நிறுத்தினார் என்பது போலவும், அவர் மட்டும் இல்லாதிருந்தால் சோவியத் யூனியன் சிதறிப் போயிருக்கும் என்பது போலவும் பொய்ச் சித்திரத்தை உருவாக்க டிராட்ஸ்கியப் பொய்யர்கள் முயற்சிக்கிறார்கள்.
ஆனால் உண்மை வேறு விதமாக இருக்கிறது.
சாரிட்சன் போர் முதல் பிரேமின் யூரல்ஸ், பெத்ரோகிராத், கிரஸ்னயா கொர்க்கா, டோனெட்ஸ், கார்கொவ், லவோவ் என ஏராளமான போர் முனைகளில் பெறப்பட்ட திருப்புமுனை வெற்றிகளுக்கு ஸ்டாலினே காரணமாக இருந்தார்.
அதனால் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியும், லெனினும் அவரைத் தொடர்ந்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு போர்முனைகளுக்கு அனுப்பிக் கொண்டே இருந்தனர்.
சில போர் முனைகளில் - குறிப்பாக சாரிட்சன் மற்றும் டோனெட்ஸ் பகுதிகளில் – செம்படைகளின் சறுக்கலுக்கு டிராட்ஸ்கி நேரடிக் காரணமாகவே இருந்தார். அதனை மாற்றியமைப்பவராக ஸ்டாலின் இருந்தார். தனது பணிகளில் டிராட்ஸ்கி தலையிடக் கூடாது என்ற ஸ்டாலினின் நிபந்தனையை ஏற்றுக் கொண்டு தெற்குப் போர் முனைக்கு அவரை அனுப்பியது சோவியத் கம்யூனிஸ்டு கட்சி!!!
சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் எட்டாவது காங்கிரசில் அவரது அபத்தமான முடிவுகளுக்காக டிராட்ஸ்கி கடுமையாக விமரிசிக்கப் பட்டார்.

ஆக, உள்நாட்டுப் போரில் சோவியத் யூனியன் பெற்ற வெற்றியானது போர் கமிசார் ஆக இருந்த டிராட்ஸ்கியால் கிடைத்த வெற்றி அல்ல, மாறாக அது அவரையும் மீறி பறித்தெடுக்கப்பட்ட வெற்றி (Not because of Trotsky but despite Trotsky) என்பது உறுதியாகத் தெரிகிறது. 




வெள்ளி, 9 அக்டோபர், 2020

முதலாளித்துவ நாடுகளில் கம்யூனிஸ்டுகள் மக்கள் செல்வாக்கைப் பெறுவது பற்றி

 


“1952ஆம் ஆண்டில் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் பத்தொன்பதாவது காங்கிரசுக்கு அளித்த தனது இறுதி பொது உரையில், இன்னமும் புரட்சியை நடத்தி முடிக்காத கட்சிகள் கடைப்பிடிக்க வேண்டிய சரியான புரட்சிகர பாதையை ஸ்டாலின் விளக்குகிறார்.
 
உலகப் புரட்சியின் வெற்றிகள் முதலாளித்துவ உலகத்தை சுருங்கச் செய்து, ஏகாதிபத்திய சக்திகளை சிதைவடையச் செய்துள்ளது. எனவே மேற்கத்திய ஜனநாயக நாடுகளின் முதலாளித்துவம், தோற்கடிக்கப்பட்ட பாசிச சக்திகளின் பதாகைகளை மரபுரிமையாகப் பெறுகிறது, அத்தகைய சக்திகளுடன் உலகளாவிய கூட்டணியை நிறுவுகிறது, உள்நாட்டில் பாசிசத்தை நோக்கித் திரும்புகிறது, புதிய காலனித்துவ நாடுகளின் முதலாளித்துவம் அவர்களின் கைப்பாவைகளாக மாறும்.
 
பின்னர் கம்யூனிஸ்டுகள், முதலாளித்துவ வர்க்கம் ஒரு புரட்சிகர வர்க்கமாக இருந்தபோது நிறுவப்பட்டு, அது சிதையும் சகாப்தம் வரை அதனால் பாதுகாக்கப்பட்ட சுதந்திரங்கள் மற்றும் முற்போக்கான கொள்கைகள் ஆகியவற்றின் முக்கியப் பாதுகாவலர்களாக மாறுகிறார்கள். 
 
முதலாளித்துவத்தால் தூக்கி எறியப்பட்ட தேசிய சுதந்திரம் மற்றும் ஜனநாயக சுதந்திரங்கள் ஆகியவற்றை உயர்த்திப் பிடித்துப் பாதுகாக்கும் போதுதான் கம்யூனிஸ்டுகள் அந்தந்த நாடுகளில் உள்ள பெரும்பான்மையான மக்களை வழிநடத்துவார்கள்.”
 
On Stalin நூலில் இருந்து

சனி, 19 செப்டம்பர், 2020

லெனின் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ஸ்டாலினுடன் ஆன அவரது நட்புறவு எப்படிப்பட்டதாக இருந்தது?





லெனின் தனது இறுதிக் காலத்தில் ஸ்டாலினுடன் மிக மோசமான கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்...

 

இருவருக்கும் இடையில் உறவு மிக மோசமான முறையில் சீர்கெட்டு இருந்தது...

 

லெனின் உடல்நிலை தேறினால், தனது அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விடும் என்று ஸ்டாலின் அஞ்சினார்...

 

ஆகவே தான் அவர் லெனினுக்கு விஷம் வைத்துக் கொலை செய்தார் என்று நம்புவதற்குக் காரணம் இருக்கிறது...

 

இவையெல்லாம் ஸ்டாலின் குறித்து டிராட்ஸ்கியவாதிகள் கூறும் அவதூறுகளின் ஒரு பகுதி.

 

லெனின் பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டு, உடலின் ஒரு பகுதி செயலிழந்த நிலையில் இருந்த போது, முழுமையாக அவருடன் இருந்த லெனினின் சகோதரி மரியா உலியனோவா, லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு இடையிலான உறவு பற்றிக் கூறியது:

 

லெனின் உண்மையில் ஸ்டாலினை வெகுவாகப் பாராட்டினார். உதாரணமாக, 1922 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் லெனின் முதல் முறையாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட போதும், 1922 டிசம்பரில் இரண்டாவது முறை பாதிக்கப்பட்ட போதும், அவர் ஸ்டாலினை அழைத்து மிக நெருக்கமான பணிகளைக் கொடுத்தார்.....

 

மேலும், தான் ஸ்டாலினுடன் மட்டுமே பேச விரும்புவதாகவும், வேறு யாருடனும் பேச விரும்பவில்லை என்றும் லெனின் வலியுறுத்தினார்.

 

பொதுவாக அவர் நோய்வாய்ப் பட்டு இருந்த காலம் முழுமையும், தோழர்களுடன் தொடர்பில் இருக்கும் வாய்ப்பு இருந்த காலம் வரையிலும், அவர் ஸ்டாலினையே அதிகமான முறைகள் அழைத்தார்.

 

மேலும் அவர் மோசமாக நோய்வாய்ப் பட்டு இருந்த காலம் முழுவதும், பொலிட்பீரோ உறுப்பினர்களில் ஸ்டாலினைத் தவிர வேறு எவரையும் அழைக்கவே இல்லை”.

 

இது போன்ற தரவுகள் தமிழில் இல்லை என்பதால் இங்கே டிராட்ஸ்கிய கூட்டம் பொய்களைக் கடைவிரித்துக் கொண்டிருக்கிறது.

 

இன்னும் எத்தனை காலம்?

 


ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

லெனினுக்கு விஷம் கொடுத்துக் கொன்றாரா ஸ்டாலின்?



ஸ்டாலின் குறித்த அவதூறுகளின் உச்சகட்டமாக, லெனினின் மரணத்திற்கே ஸ்டாலின் தான் காரணம் என்றும், அவர் லெனினை விஷம் வைத்துக் கொன்று இருக்கலாம் என்றும் அதிர வைக்கும் சந்தேகம் ஒன்றை எழுப்பினார் டிராட்ஸ்கி.

 

லெனினது மரணத்திற்குப் பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் எழுதிய “Did Stalin Poison Lenin” என்ற தலைப்பில் எழுதிய அவர் இந்த சந்தேகத்தை எழுப்பினார். அத்தனை ஆண்டுக் காலம் வரையில் அவர் அத்தகைய கருத்து எதையும் வெளிப்படுத்தவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. டிராட்ஸ்கியின் கூற்றுகளைப் புனித உண்மையாகத் தலையில் தூக்கித் திரியும் டிராட்ஸ்கியவாதிகள் கூட, பதினாறு ஆண்டுக்காலத்திற்குப் பிறகு அவர் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.


இதற்கெல்லாம் டிராட்ஸ்கியிடம் இருந்து எந்த விளக்கமும் கிடையாது. ஸ்டாலின் மீதான வன்மத்தில் ஊறிப் போயிருந்த டிராட்ஸ்கியின் மூளையில் தோன்றிய வளமான கற்பனை தான் இந்தக் குற்றச்சாட்டு என்பதே இதற்குக் காரணம் ஆகும். இந்த விசயத்தில் ஸ்டாலின் மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய போதிலும் அதற்கு ஆதரவாக டிராட்ஸ்கி ஒற்றைச் சாட்சியத்தைக் கூட முன்வைக்கவில்லை.

 

மாறாக, மொட்டையான சந்தேகங்கள், ஆதாரமற்ற அவதூறுகள், திரிக்கப்பட்ட உண்மைகள் ஆகியவை மட்டுமே அவரது குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையாக இருந்தன. இதையடுத்து, லெனினுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற இந்த நிகழ்வு தான் ஸ்டாலினிசத்தின் துவக்கத்தைக் குறிப்பதாக டிராட்ஸ்கிய ஆதரவு பிரச்சார பீரங்கிகள் தொண்டை கிழியக் கத்தத் தொடங்கின.


ஸ்டாலினைக் கடுமையாக விமரிசனம் செய்து டிராட்ஸ்கியை உயர்த்திப் பிடிக்கும் ஐசாக் தாய்ஸ்சர் போன்றவர்கள் கூட “லெனினுக்கு ஸ்டாலின் விஷம் கொடுத்து இருக்கலாம் என்று டிராட்ஸ்கி கூறுகிறார். ஆனால், இது டிராட்ஸ்கியே கூறுவது போல தெளிவற்ற ஒரு ஊகம் மட்டுமே தவிர வேறில்லை. 1939-40ஆம் ஆண்டு தான் அந்தக் குற்றச்சாட்டை முதன் முதலாக அவர் கூறினார், அது வரை ஸ்டாலினுக்கு எதிரான தனது பல ஆண்டுக் காலப் போராட்டத்தில், டிராட்ஸ்கி அத்தகைய குற்றச்சாட்டை ஒருபோதும் முன்வைக்கவில்லை அல்லது குறிப்பாகக் கூட உணர்த்தவில்லை என்ற உண்மையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது அது உண்மையற்றதாகத் தெரிகிறது” என்று கூற வேண்டி இருந்தது.

 

லெனினின் இறுதிக் காலத்தில் அவரது கண்ணும் காதுமாக, வெளி உலகத்துடன் அவருக்கு ஒரே முக்கிய இணைப்பாக இருந்த அவரது மனைவி குரூப்ஸ்கயா இத்தகைய எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. சோவியத் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக் கமிட்டியின் உத்திரவுப்படி லெனின் பார்வையாளர்களைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது, எனவே அவரது பார்வையைத் தாண்டி யாரும் லெனினை அணுகி இருக்க முடியாது. அவரும் லெனினது சகோதரி மற்றும் அவரது செயலாளர்கள் மட்டுமே அவரைச் சந்திக்க உரிமை பெற்றவர்களாக இருந்தனர். அவர்களில் யாரும் கூட இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. இது குறித்து சிறு சந்தேகத்தைக் கூட எழுப்பவில்லை.


அப்படி இருக்கும் போது லெனினுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்ய ஸ்டாலின் ஏற்பாடு செய்தார் என்று டிராட்ஸ்கி சொல்வது அவரது மனப்பிறழ்வு மற்றும் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியையும் குறிப்பாக ஸ்டாலினையும் அசிங்கப்படுத்த வேண்டும் என்னும் வன்மம் காரணமாக கூறப்படும் அவதூறு மட்டுமே தவிர வேறில்லை.


 


திங்கள், 31 ஆகஸ்ட், 2020

சீனப் புரட்சியைத் தடுத்தாரா தோழர் ஸ்டாலின்? - 2



தோழர் ஸ்டாலினின் மரணத்தை அடுத்து, மார்ச் 6, 1953 அன்று சோவியத் யூனியனுக்கு அனுப்பிய தந்தியில் தோழர் மாவோ பின்வருமாறு குறிப்பிட்டார் :

 

சீன மக்கள் புரட்சியின் வெற்றியானது, தோழர் ஸ்டாலினின் இடைவிடாத கவனிப்பு (அக்கறை), தலைமைத்துவம் மற்றும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆதரவு ஆகியவற்றிலிருந்து முற்றிலும் பிரிக்க முடியாதது. சீன மக்கள் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர், தோழர் ஸ்டாலினும் சோவியத் ஒன்றியத்தின் மக்களும் அரசாங்கமும் அவரது தலைமையின் கீழ் சீன மக்களின் கட்டுமானத்திற்காக தாராளமான மற்றும் தன்னலமற்ற உதவிகளை செய்துள்ளனர். சீன மக்கள் மீது தோழர் ஸ்டாலின் கொண்டிருந்த ஒரு பெருமதிப்புக்குரிய மற்றும் ஆழமான நட்பு சீன மக்களால் நன்றியுடன் நினைவு கூரப்படும். தோழர் ஸ்டாலினின் அழிவற்ற விளக்கொளி (beacon) சீன மக்கள் முன்னோக்கி செல்லும் பாதையை எப்போதும் ஒளிரச் செய்யும்

 

டிராட்ஸ்கியவாதிகள் உளறுவது போல தோழர் ஸ்டாலின் சீனப் புரட்சியின் எதிரியாக இருந்தால், அவரது மரணத்தை ஒட்டி தோழர் மாவோ இப்படி ஒரு இரங்கல் செய்தி அனுப்பி இருப்பாரா? சீனப் புரட்சியின் வெற்றி என்பது தோழர் ஸ்டாலினின் இடைவிடாத கவனிப்பு….மற்றும் ஆதரவு ஆகியவற்றிலிருந்து முற்றிலும் பிரிக்க முடியாதது என்று தோழர் மாவோ பொய் சொல்லி இருக்கிறாரா? தோழர் ஸ்டாலினின் அழிவற்ற விளக்கொளி (beacon) சீன மக்கள் முன்னோக்கி செல்லும் பாதையை எப்போதும் ஒளிரச் செய்யும் என்று அவர் எப்படிச் சொல்லி இருக்க முடியும்? .

.

இதன் தொடர்ச்சியாக ‘மாபெரும் நட்புறவு’ என்ற கட்டுரையில் “இன்றைய யுகத்தின் மாமேதை, சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் தலை சிறந்த ஆசான், அழிவிலா லெனினது போராளித் தோழர்” என்பதாக தோழர் மாவோ அவர்கள் தோழர் ஸ்டாலின் பற்றிய தனது மதிப்பீட்டை முன்வைத்தார். தோழர் ஸ்டாலின் குறித்து இதற்கு நேர் மாறான மதிப்பீட்டை வைத்திருக்கும் டிராட்ஸ்கியவாதிகள், இவற்றைப் பற்றிப் பேசாமல் அவர் முன்வைத்த ஏதோ ஒரு மதிப்பீட்டை மட்டுமே முன்னிறுத்திக் காலம் காலமாகப் பேசிக் கொண்டிருப்பது அயோக்கியத் தனத்தின் உச்சகட்டம் மட்டுமே.

 

இதனை மேலும் தொடர்ந்த தோழர் மாவோ “தனது தத்துவார்த்த நடவடிக்கைகள் மற்றும் நடைமுறை ஆகியவற்றின் மூலம் தமது சகாப்தத்திற்குத் தோழர் ஸ்டாலின் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. தோழர் ஸ்டாலின் நமது புதிய சகாப்தம் முழுவதையும் பிரதிநிதித்துவப் படுத்தினார். அவரது நடவடிக்கைகள் ஒட்டுமொத்த உலக நிலைமை முழுதையும் தலைகீழாக மாற்றியமைப்பதற்கு சோவியத் மக்களுக்கும் அனைத்து நாடுகளையும் சேர்ந்த மக்களுக்குக்கும் உதவி செய்துள்ளது” என்றார். தோழர் ஸ்டாலினின் தத்துவார்த்த நிலைப்பாடுகளை, நடைமுறைகளை முற்றாக மறுதலிக்கும் டிராட்ஸ்கியவாதிகள் கூட்டம், சீனப் புரட்சி குறித்து தோழர் மாவோவின் கருத்து பற்றிப் பேசும் அதே சமயம் தோழர் மாவோவின் இத்தகைய மதிப்பீடுகளைக் காணாதது போலக் கடந்து போய் விடுவார்கள். அவர்களது அரசியல் நேர்மை அவ்வளவு தான்.

 

தோழர் ஸ்டாலின் படைப்புகள் அனைத்தும் மார்க்சியத்தின் அழிவற்ற ஆவணங்கள். அவரது படைப்புகளான லெனினிசத்தின் அடிப்படைகள், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி [போல்ஷிவிக்] வரலாறு மற்றும் அவரது கடைசி படைப்பான சோவியத் யூனியனில் சோசலிசத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் ஆகியவை மார்க்சிய-லெனினிசத்தின் கலைக்களஞ்சியமாக அமைகின்றன. அவை கடந்த நூறு ஆண்டுகளில் உலக கம்யூனிஸ்ட் இயக்க அனுபவத்தின் தொகுப்பாகும்… எல்லா நாடுகளின் கம்யூனிஸ்டுகளைப் போலவே, சீன கம்யூனிஸ்டுகள் ஆகிய நாங்களும் தோழர் ஸ்டாலினின் மாபெரும் படைப்புகளில் வெற்றிக்கான எங்கள் சொந்தப் பாதையைத் தேடுகிறோம்” என்று தோழர் மாவோ அறிவித்தார். தோழர் மாவோவின் இந்த மதிப்பீட்டை டிராட்ஸ்கியவாதிகள் முற்றாக மறுப்பார்கள் என்பதில் நமக்கு கொஞ்சமும் ஐயமே கிடையாது, பின்னர் தோழர் மாவோவின் கருத்துக்களை உயர்த்திப் பிடிப்பது போலப் பகல் வேடம் போடுவது யாரை ஏமாற்றுவதற்காகச் செய்யப்படும் பித்தலாட்டம்?

 

தோழர் ஸ்டாலின் மரணத்திற்குப் பின்பு, குருஷ்சேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்டு கட்சி அவரை முற்றாக மறுதலிக்கும் போக்கை முழு வேகத்துடன் நடைமுறைப் படுத்திக் கொண்டிருந்த போது, தோழர் மாவோ தனிமனித வழிபாட்டுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தோழர் ஸ்டாலினை முற்றாக மறுப்பது “முற்றிலும் தவறானது மற்றும் உள்நோக்கம் உடையது” என்றார். சோவியத் யூனியனே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கட்டமைக்கப்பட்ட முதல் நாடு என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், லெனினுக்குப் பின்னர் சோவியத் நாடு மற்றும் கட்சிக்கு மட்டுமின்றி, சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கும் தலைவராக இருந்தார் என்று புகழாரம் சூட்டினார். அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய நாற்பத்தாறு ஆண்டுகளில் (இது 1963ஆம் ஆண்டு எழுதப்பட்டது), அவற்றில் முப்பது ஆண்டுக்காலம் ஸ்டாலின் தான் நாட்டின் மாபெரும் தலைவராக இருந்தார், அவரது செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நினைவுபடுத்தினார். ஸ்டாலினின் பங்களிப்புகளை அவர் பட்டியலிட்டார்.

 

ஸ்டாலின் ஒரு முழு வரலாற்றுக் காலம் முழுவதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் சர்வதேச கம்யூனிச இயக்கம் ஆகியவற்றின் சிறந்த தலைவராக இருந்தார், அவரை மதிப்பீடு செய்வதில் அதிக கவனத்தைக் கையாள வேண்டும்” என்று தோழர் மாவோ எச்சரிக்கை செய்தார். ஆனால் டிராட்ஸ்கியவாதிகள் தற்போது செய்வது என்ன? தோழர் மாவோவின் மேற்படி எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, தோழர் ஸ்டாலினை அவதூறு செய்வதற்கான வசதியான ஒரு வாய்ப்பு ஆக தோழர் மாவோவின் கூற்றைப் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள், அந்த முயற்சியில் அசிங்கமாகத் தோற்றுப் போகிறார்கள்.

 

“சீனக் கம்யூனிஸ்டு கட்சி ஸ்டாலினைப் “பாதுகாக்கிறது” (defending) என்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆம், நாங்கள் ஸ்டாலினைப் பாதுகாக்கிறோம். குருஷ்சேவ் வரலாற்றை திரித்து, ஸ்டாலினை முற்றிலுமாக மறுக்கும்போது, இயல்பாகவே சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் நலன்களுக்காக முன்வந்து அவரைக் காப்பாற்றுவது எங்களது தவிர்க்க முடியாத கடமை ஆகிறது” என்றார் மாவோ (On the question of Stalin, September 13, 1963).


சீனப் புரட்சி குறித்த மாவோவின் கருத்துகளைக் கூரை மேல் ஏறி நின்று கொண்டு கூவித் திரியும் டிராட்ஸ்கியவாதிகள், இதற்கு பதில் கேட்டால் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஸ்டாலினை மறுப்பது சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் நலன்களுக்கு எதிரானது என்று தோழர் மாவோ கூறி இருக்கும் போது டிராட்ஸ்கியவாதிகள் அவரை முற்றாக மறுப்பது, அதனைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கம் உடையதாக இல்லாமல் வேறெப்படி இருக்க முடியும்? அதனை மேற்கொள்பவர்கள் சர்வதேச கம்யூனிச இயக்கத்தைச் சீர்குலைக்க முயல்பவர்கள் இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்?

(தொடரும்)


  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...