திங்கள், 31 ஆகஸ்ட், 2020

சீனப் புரட்சியைத் தடுத்தாரா தோழர் ஸ்டாலின்? - 2



தோழர் ஸ்டாலினின் மரணத்தை அடுத்து, மார்ச் 6, 1953 அன்று சோவியத் யூனியனுக்கு அனுப்பிய தந்தியில் தோழர் மாவோ பின்வருமாறு குறிப்பிட்டார் :

 

சீன மக்கள் புரட்சியின் வெற்றியானது, தோழர் ஸ்டாலினின் இடைவிடாத கவனிப்பு (அக்கறை), தலைமைத்துவம் மற்றும் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான ஆதரவு ஆகியவற்றிலிருந்து முற்றிலும் பிரிக்க முடியாதது. சீன மக்கள் புரட்சியின் வெற்றிக்குப் பின்னர், தோழர் ஸ்டாலினும் சோவியத் ஒன்றியத்தின் மக்களும் அரசாங்கமும் அவரது தலைமையின் கீழ் சீன மக்களின் கட்டுமானத்திற்காக தாராளமான மற்றும் தன்னலமற்ற உதவிகளை செய்துள்ளனர். சீன மக்கள் மீது தோழர் ஸ்டாலின் கொண்டிருந்த ஒரு பெருமதிப்புக்குரிய மற்றும் ஆழமான நட்பு சீன மக்களால் நன்றியுடன் நினைவு கூரப்படும். தோழர் ஸ்டாலினின் அழிவற்ற விளக்கொளி (beacon) சீன மக்கள் முன்னோக்கி செல்லும் பாதையை எப்போதும் ஒளிரச் செய்யும்

 

டிராட்ஸ்கியவாதிகள் உளறுவது போல தோழர் ஸ்டாலின் சீனப் புரட்சியின் எதிரியாக இருந்தால், அவரது மரணத்தை ஒட்டி தோழர் மாவோ இப்படி ஒரு இரங்கல் செய்தி அனுப்பி இருப்பாரா? சீனப் புரட்சியின் வெற்றி என்பது தோழர் ஸ்டாலினின் இடைவிடாத கவனிப்பு….மற்றும் ஆதரவு ஆகியவற்றிலிருந்து முற்றிலும் பிரிக்க முடியாதது என்று தோழர் மாவோ பொய் சொல்லி இருக்கிறாரா? தோழர் ஸ்டாலினின் அழிவற்ற விளக்கொளி (beacon) சீன மக்கள் முன்னோக்கி செல்லும் பாதையை எப்போதும் ஒளிரச் செய்யும் என்று அவர் எப்படிச் சொல்லி இருக்க முடியும்? .

.

இதன் தொடர்ச்சியாக ‘மாபெரும் நட்புறவு’ என்ற கட்டுரையில் “இன்றைய யுகத்தின் மாமேதை, சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் தலை சிறந்த ஆசான், அழிவிலா லெனினது போராளித் தோழர்” என்பதாக தோழர் மாவோ அவர்கள் தோழர் ஸ்டாலின் பற்றிய தனது மதிப்பீட்டை முன்வைத்தார். தோழர் ஸ்டாலின் குறித்து இதற்கு நேர் மாறான மதிப்பீட்டை வைத்திருக்கும் டிராட்ஸ்கியவாதிகள், இவற்றைப் பற்றிப் பேசாமல் அவர் முன்வைத்த ஏதோ ஒரு மதிப்பீட்டை மட்டுமே முன்னிறுத்திக் காலம் காலமாகப் பேசிக் கொண்டிருப்பது அயோக்கியத் தனத்தின் உச்சகட்டம் மட்டுமே.

 

இதனை மேலும் தொடர்ந்த தோழர் மாவோ “தனது தத்துவார்த்த நடவடிக்கைகள் மற்றும் நடைமுறை ஆகியவற்றின் மூலம் தமது சகாப்தத்திற்குத் தோழர் ஸ்டாலின் ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. தோழர் ஸ்டாலின் நமது புதிய சகாப்தம் முழுவதையும் பிரதிநிதித்துவப் படுத்தினார். அவரது நடவடிக்கைகள் ஒட்டுமொத்த உலக நிலைமை முழுதையும் தலைகீழாக மாற்றியமைப்பதற்கு சோவியத் மக்களுக்கும் அனைத்து நாடுகளையும் சேர்ந்த மக்களுக்குக்கும் உதவி செய்துள்ளது” என்றார். தோழர் ஸ்டாலினின் தத்துவார்த்த நிலைப்பாடுகளை, நடைமுறைகளை முற்றாக மறுதலிக்கும் டிராட்ஸ்கியவாதிகள் கூட்டம், சீனப் புரட்சி குறித்து தோழர் மாவோவின் கருத்து பற்றிப் பேசும் அதே சமயம் தோழர் மாவோவின் இத்தகைய மதிப்பீடுகளைக் காணாதது போலக் கடந்து போய் விடுவார்கள். அவர்களது அரசியல் நேர்மை அவ்வளவு தான்.

 

தோழர் ஸ்டாலின் படைப்புகள் அனைத்தும் மார்க்சியத்தின் அழிவற்ற ஆவணங்கள். அவரது படைப்புகளான லெனினிசத்தின் அடிப்படைகள், சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி [போல்ஷிவிக்] வரலாறு மற்றும் அவரது கடைசி படைப்பான சோவியத் யூனியனில் சோசலிசத்தின் பொருளாதாரப் பிரச்சினைகள் ஆகியவை மார்க்சிய-லெனினிசத்தின் கலைக்களஞ்சியமாக அமைகின்றன. அவை கடந்த நூறு ஆண்டுகளில் உலக கம்யூனிஸ்ட் இயக்க அனுபவத்தின் தொகுப்பாகும்… எல்லா நாடுகளின் கம்யூனிஸ்டுகளைப் போலவே, சீன கம்யூனிஸ்டுகள் ஆகிய நாங்களும் தோழர் ஸ்டாலினின் மாபெரும் படைப்புகளில் வெற்றிக்கான எங்கள் சொந்தப் பாதையைத் தேடுகிறோம்” என்று தோழர் மாவோ அறிவித்தார். தோழர் மாவோவின் இந்த மதிப்பீட்டை டிராட்ஸ்கியவாதிகள் முற்றாக மறுப்பார்கள் என்பதில் நமக்கு கொஞ்சமும் ஐயமே கிடையாது, பின்னர் தோழர் மாவோவின் கருத்துக்களை உயர்த்திப் பிடிப்பது போலப் பகல் வேடம் போடுவது யாரை ஏமாற்றுவதற்காகச் செய்யப்படும் பித்தலாட்டம்?

 

தோழர் ஸ்டாலின் மரணத்திற்குப் பின்பு, குருஷ்சேவ் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்டு கட்சி அவரை முற்றாக மறுதலிக்கும் போக்கை முழு வேகத்துடன் நடைமுறைப் படுத்திக் கொண்டிருந்த போது, தோழர் மாவோ தனிமனித வழிபாட்டுக்கு எதிர்ப்பு என்ற பெயரில் தோழர் ஸ்டாலினை முற்றாக மறுப்பது “முற்றிலும் தவறானது மற்றும் உள்நோக்கம் உடையது” என்றார். சோவியத் யூனியனே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் கட்டமைக்கப்பட்ட முதல் நாடு என்பதைச் சுட்டிக் காட்டிய அவர், லெனினுக்குப் பின்னர் சோவியத் நாடு மற்றும் கட்சிக்கு மட்டுமின்றி, சர்வதேச கம்யூனிச இயக்கத்திற்கும் தலைவராக இருந்தார் என்று புகழாரம் சூட்டினார். அக்டோபர் புரட்சிக்குப் பிந்தைய நாற்பத்தாறு ஆண்டுகளில் (இது 1963ஆம் ஆண்டு எழுதப்பட்டது), அவற்றில் முப்பது ஆண்டுக்காலம் ஸ்டாலின் தான் நாட்டின் மாபெரும் தலைவராக இருந்தார், அவரது செயல்பாடுகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்பதை நினைவுபடுத்தினார். ஸ்டாலினின் பங்களிப்புகளை அவர் பட்டியலிட்டார்.

 

ஸ்டாலின் ஒரு முழு வரலாற்றுக் காலம் முழுவதும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மற்றும் சர்வதேச கம்யூனிச இயக்கம் ஆகியவற்றின் சிறந்த தலைவராக இருந்தார், அவரை மதிப்பீடு செய்வதில் அதிக கவனத்தைக் கையாள வேண்டும்” என்று தோழர் மாவோ எச்சரிக்கை செய்தார். ஆனால் டிராட்ஸ்கியவாதிகள் தற்போது செய்வது என்ன? தோழர் மாவோவின் மேற்படி எச்சரிக்கையைக் காற்றில் பறக்க விட்டு விட்டு, தோழர் ஸ்டாலினை அவதூறு செய்வதற்கான வசதியான ஒரு வாய்ப்பு ஆக தோழர் மாவோவின் கூற்றைப் பயன்படுத்த முயற்சி செய்கிறார்கள், அந்த முயற்சியில் அசிங்கமாகத் தோற்றுப் போகிறார்கள்.

 

“சீனக் கம்யூனிஸ்டு கட்சி ஸ்டாலினைப் “பாதுகாக்கிறது” (defending) என்று சோவியத் யூனியன் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆம், நாங்கள் ஸ்டாலினைப் பாதுகாக்கிறோம். குருஷ்சேவ் வரலாற்றை திரித்து, ஸ்டாலினை முற்றிலுமாக மறுக்கும்போது, இயல்பாகவே சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் நலன்களுக்காக முன்வந்து அவரைக் காப்பாற்றுவது எங்களது தவிர்க்க முடியாத கடமை ஆகிறது” என்றார் மாவோ (On the question of Stalin, September 13, 1963).


சீனப் புரட்சி குறித்த மாவோவின் கருத்துகளைக் கூரை மேல் ஏறி நின்று கொண்டு கூவித் திரியும் டிராட்ஸ்கியவாதிகள், இதற்கு பதில் கேட்டால் ஓடி ஒளிந்து கொள்வார்கள். ஸ்டாலினை மறுப்பது சர்வதேச கம்யூனிச இயக்கத்தின் நலன்களுக்கு எதிரானது என்று தோழர் மாவோ கூறி இருக்கும் போது டிராட்ஸ்கியவாதிகள் அவரை முற்றாக மறுப்பது, அதனைச் சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கம் உடையதாக இல்லாமல் வேறெப்படி இருக்க முடியும்? அதனை மேற்கொள்பவர்கள் சர்வதேச கம்யூனிச இயக்கத்தைச் சீர்குலைக்க முயல்பவர்கள் இல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்?

(தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...