சனி, 19 செப்டம்பர், 2020

லெனின் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் ஸ்டாலினுடன் ஆன அவரது நட்புறவு எப்படிப்பட்டதாக இருந்தது?





லெனின் தனது இறுதிக் காலத்தில் ஸ்டாலினுடன் மிக மோசமான கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்...

 

இருவருக்கும் இடையில் உறவு மிக மோசமான முறையில் சீர்கெட்டு இருந்தது...

 

லெனின் உடல்நிலை தேறினால், தனது அரசியல் வாழ்வு முடிவுக்கு வந்து விடும் என்று ஸ்டாலின் அஞ்சினார்...

 

ஆகவே தான் அவர் லெனினுக்கு விஷம் வைத்துக் கொலை செய்தார் என்று நம்புவதற்குக் காரணம் இருக்கிறது...

 

இவையெல்லாம் ஸ்டாலின் குறித்து டிராட்ஸ்கியவாதிகள் கூறும் அவதூறுகளின் ஒரு பகுதி.

 

லெனின் பக்கவாத நோயால் பாதிக்கப் பட்டு, உடலின் ஒரு பகுதி செயலிழந்த நிலையில் இருந்த போது, முழுமையாக அவருடன் இருந்த லெனினின் சகோதரி மரியா உலியனோவா, லெனின் மற்றும் ஸ்டாலின் ஆகியோருக்கு இடையிலான உறவு பற்றிக் கூறியது:

 

லெனின் உண்மையில் ஸ்டாலினை வெகுவாகப் பாராட்டினார். உதாரணமாக, 1922 ஆம் ஆண்டு வசந்த காலத்தில் லெனின் முதல் முறையாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட போதும், 1922 டிசம்பரில் இரண்டாவது முறை பாதிக்கப்பட்ட போதும், அவர் ஸ்டாலினை அழைத்து மிக நெருக்கமான பணிகளைக் கொடுத்தார்.....

 

மேலும், தான் ஸ்டாலினுடன் மட்டுமே பேச விரும்புவதாகவும், வேறு யாருடனும் பேச விரும்பவில்லை என்றும் லெனின் வலியுறுத்தினார்.

 

பொதுவாக அவர் நோய்வாய்ப் பட்டு இருந்த காலம் முழுமையும், தோழர்களுடன் தொடர்பில் இருக்கும் வாய்ப்பு இருந்த காலம் வரையிலும், அவர் ஸ்டாலினையே அதிகமான முறைகள் அழைத்தார்.

 

மேலும் அவர் மோசமாக நோய்வாய்ப் பட்டு இருந்த காலம் முழுவதும், பொலிட்பீரோ உறுப்பினர்களில் ஸ்டாலினைத் தவிர வேறு எவரையும் அழைக்கவே இல்லை”.

 

இது போன்ற தரவுகள் தமிழில் இல்லை என்பதால் இங்கே டிராட்ஸ்கிய கூட்டம் பொய்களைக் கடைவிரித்துக் கொண்டிருக்கிறது.

 

இன்னும் எத்தனை காலம்?

 


ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

லெனினுக்கு விஷம் கொடுத்துக் கொன்றாரா ஸ்டாலின்?



ஸ்டாலின் குறித்த அவதூறுகளின் உச்சகட்டமாக, லெனினின் மரணத்திற்கே ஸ்டாலின் தான் காரணம் என்றும், அவர் லெனினை விஷம் வைத்துக் கொன்று இருக்கலாம் என்றும் அதிர வைக்கும் சந்தேகம் ஒன்றை எழுப்பினார் டிராட்ஸ்கி.

 

லெனினது மரணத்திற்குப் பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் எழுதிய “Did Stalin Poison Lenin” என்ற தலைப்பில் எழுதிய அவர் இந்த சந்தேகத்தை எழுப்பினார். அத்தனை ஆண்டுக் காலம் வரையில் அவர் அத்தகைய கருத்து எதையும் வெளிப்படுத்தவே இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. டிராட்ஸ்கியின் கூற்றுகளைப் புனித உண்மையாகத் தலையில் தூக்கித் திரியும் டிராட்ஸ்கியவாதிகள் கூட, பதினாறு ஆண்டுக்காலத்திற்குப் பிறகு அவர் இத்தகைய குற்றச்சாட்டை முன்வைப்பது ஏன் என்ற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.


இதற்கெல்லாம் டிராட்ஸ்கியிடம் இருந்து எந்த விளக்கமும் கிடையாது. ஸ்டாலின் மீதான வன்மத்தில் ஊறிப் போயிருந்த டிராட்ஸ்கியின் மூளையில் தோன்றிய வளமான கற்பனை தான் இந்தக் குற்றச்சாட்டு என்பதே இதற்குக் காரணம் ஆகும். இந்த விசயத்தில் ஸ்டாலின் மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய போதிலும் அதற்கு ஆதரவாக டிராட்ஸ்கி ஒற்றைச் சாட்சியத்தைக் கூட முன்வைக்கவில்லை.

 

மாறாக, மொட்டையான சந்தேகங்கள், ஆதாரமற்ற அவதூறுகள், திரிக்கப்பட்ட உண்மைகள் ஆகியவை மட்டுமே அவரது குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படையாக இருந்தன. இதையடுத்து, லெனினுக்கு விஷம் கொடுத்துக் கொன்ற இந்த நிகழ்வு தான் ஸ்டாலினிசத்தின் துவக்கத்தைக் குறிப்பதாக டிராட்ஸ்கிய ஆதரவு பிரச்சார பீரங்கிகள் தொண்டை கிழியக் கத்தத் தொடங்கின.


ஸ்டாலினைக் கடுமையாக விமரிசனம் செய்து டிராட்ஸ்கியை உயர்த்திப் பிடிக்கும் ஐசாக் தாய்ஸ்சர் போன்றவர்கள் கூட “லெனினுக்கு ஸ்டாலின் விஷம் கொடுத்து இருக்கலாம் என்று டிராட்ஸ்கி கூறுகிறார். ஆனால், இது டிராட்ஸ்கியே கூறுவது போல தெளிவற்ற ஒரு ஊகம் மட்டுமே தவிர வேறில்லை. 1939-40ஆம் ஆண்டு தான் அந்தக் குற்றச்சாட்டை முதன் முதலாக அவர் கூறினார், அது வரை ஸ்டாலினுக்கு எதிரான தனது பல ஆண்டுக் காலப் போராட்டத்தில், டிராட்ஸ்கி அத்தகைய குற்றச்சாட்டை ஒருபோதும் முன்வைக்கவில்லை அல்லது குறிப்பாகக் கூட உணர்த்தவில்லை என்ற உண்மையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது அது உண்மையற்றதாகத் தெரிகிறது” என்று கூற வேண்டி இருந்தது.

 

லெனினின் இறுதிக் காலத்தில் அவரது கண்ணும் காதுமாக, வெளி உலகத்துடன் அவருக்கு ஒரே முக்கிய இணைப்பாக இருந்த அவரது மனைவி குரூப்ஸ்கயா இத்தகைய எந்தக் குற்றச்சாட்டையும் முன்வைக்கவில்லை. சோவியத் கம்யூனிஸ்டு கட்சி மத்தியக் கமிட்டியின் உத்திரவுப்படி லெனின் பார்வையாளர்களைச் சந்திக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது, எனவே அவரது பார்வையைத் தாண்டி யாரும் லெனினை அணுகி இருக்க முடியாது. அவரும் லெனினது சகோதரி மற்றும் அவரது செயலாளர்கள் மட்டுமே அவரைச் சந்திக்க உரிமை பெற்றவர்களாக இருந்தனர். அவர்களில் யாரும் கூட இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்கவில்லை. இது குறித்து சிறு சந்தேகத்தைக் கூட எழுப்பவில்லை.


அப்படி இருக்கும் போது லெனினுக்கு விஷம் கொடுத்துக் கொலை செய்ய ஸ்டாலின் ஏற்பாடு செய்தார் என்று டிராட்ஸ்கி சொல்வது அவரது மனப்பிறழ்வு மற்றும் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியையும் குறிப்பாக ஸ்டாலினையும் அசிங்கப்படுத்த வேண்டும் என்னும் வன்மம் காரணமாக கூறப்படும் அவதூறு மட்டுமே தவிர வேறில்லை.


 


  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...