சனி, 28 நவம்பர், 2020

மக்கள் தலைவன்



மக்கள் தலைவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும், நெருக்கடியான தருணத்தில் நாட்டையும் மக்களையும் எப்படி வழிநடத்த வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டு ஆக வாழ்ந்து காட்டியவர் ஸ்டாலின்.

ஜூன் 22, 1941 அன்று நாஜி ஜெர்மனி சோவியத் யூனியன் மீது தனது நாசகாரத் தாக்குதலைத் தொடங்கியது. மிக விரைவாக பல பகுதிகளைக் கைப்பற்றி பேரழிவை ஏற்படுத்தி முன்னேறியது ஜெர்மன் படை. அக்டோபர் 2, 1941 அன்று மாஸ்கோ நகரத்தின் மீது தனது முதலாவது தாக்குதலைத் தொடங்கியது.

மாஸ்கோ நகரத்தில் இருந்து முதியவர்கள், குழந்தைகள் எனப் பலரும் வெளியேற்றப் பட்டனர். நகரைப் பாதுகாப்பதற்குக் கடுமையான ஏற்பாடுகளை மேற்கொண்டது செம்படை. மாஸ்கோ நகர மக்கள் அனைவரும் இறுதி யுத்தத்திற்கு முழு வேகத்துடன் செம்படைக்கு உதவினர். தோழர் ஸ்டாலின் நகரப் பாதுகாப்புக்கான கமிட்டியின் கூட்டங்களில் கலந்து கொண்டு நேரடியாகத் தாக்குதலுக்கு வழிகாட்டினார். ஜெர்மன் விமானங்கள் தாக்குதல் நடத்திக் கொண்டிருந்த போதிலும் நகரின் பல பகுதிகளுக்குச் சென்று போர் நடவடிக்கைகளை நேரடியாக ஆய்வு செய்தார். தினமும் தடுப்பு அரண்கள், பதுங்கு குழிகள் என ஒவ்வொன்றையும் பார்வையிட்டு தேவைப்பட்ட போது மாற்று ஏற்பாடுகள் செய்வதற்கு உடனடி உத்திரவிட்டு நடைமுறைப் படுத்தினார். ஒரு சில இரண்டாம் நிலைத் தலைவர்கள் கூட மனமொடிந்து சோர்ந்து போன போதும், முழுமையான மன உறுதியுடன் செயல்பட்டார். நாம் தான் வெற்றி பெறுவோம் என்பதில் ஐயம் வேண்டாம் என்று மாஸ்கோ நகர மக்களுக்கு நேரடியாக அறிவுறுத்தினார்.

ஒரு கட்டத்தில் நிலைமை மோசமான போது அரசுத் தலைமையகத்தை குய்பிஷேவ் பகுதிக்கு மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்ட போதும் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு இரண்டாம் நிலைத் தலைவர்களை அனுப்பி விட்டு தான் கடைசி வரையில் மாஸ்கோவில் மட்டுமே இருப்பது என்று உறுதியுடன் செயல்பட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, நவம்பர் புரட்சி தினம் அன்று, இத்தனை அச்சுறுத்தல்களுக்கும் நடுவே மாஸ்கோ நகரில் படைகளின் வெற்றிப் பேரணியையும் நடத்தினார்!

இத்தகைய அசாதாரணச் செயல்களைச் செய்யக் கூடிய தலைவன் வேறு யாரும் இருக்க முடியாது.

இவை அனைத்துக்கும் மேலாக, இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்ற பின்னர், அந்த வெற்றிக்குக் காரணம் ஸ்டாலின் தான் என்று சொன்ன போது அதை மறுத்து, இல்லை சோவியத் மக்கள் தான் வெற்றிக்குக் காரணம் என்று சொன்னார்!



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...