புதன், 20 ஜனவரி, 2021

போலந்தை ஆக்கிரமித்ததா சோவியத் யூனியன்?




செப்டம்பர் 17, 1939 அன்று சர்வதேச எல்லையைக் கடந்து போலந்து நாட்டுக்குள் நுழைந்து பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது சோவியத் செஞ்சேனை. அதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் போலந்தைத் தாக்கி அதன் மேற்குப் பகுதிகளைக் கைப்பற்றி இருந்தது இட்லரின் நாஜிப் படைகள்.

அன்று முதல் இன்று வரை மேற்குலக நாடுகளும் டிராட்ஸ்கிய ஏஜெண்டுகளும் சோவியத் யூனியனின் இந்த நடவடிக்கையை இட்லருடன் கூட்டாக மேற்கொண்ட ஆக்கிரமிப்பு என்றும், நாஜிக்களுக்கு இணையாக மேற்கொள்ளப்பட்ட நாடு பிடிக்கும் செயல் என்றும் பிதற்றித் திரிகின்றனர்.
ஆனால் வரலாற்று உண்மைகள் வேறு வகையானவை ஆக இருக்கின்றன.
இந்த நிகழ்வுகளுக்கு முன்னரே போலந்து மீது நாஜித் தாக்குதலை எதிர்நோக்கிய சோவியத் யூனியன் அந்நாட்டுக்கு உதவியளிக்கத் தயாராக இருந்தது. ஆனால் நாஜி ஜெர்மனியை விட சோவியத் யூனியனை அதிகம் வெறுத்த போலந்து ஆட்சியாளர்கள், இதனை ஏற்கத் தயாராக இல்லை. பிரான்சும் இங்கிலாந்தும் இதனை ஆதரிக்க மறுத்தன.
இதன் விளைவாக நாஜித் தாக்குதலில் இரண்டே நாளில் போலந்து விமானப்படை முடங்கியது, அந்நாட்டு ராணுவம் சிதறி அழிந்தது, அரசுத் தலைவர்கள் ஓடி விட அங்கு அரசு என்பதே இல்லாமல் போனது. சோவியத் யூனியனுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சரியான களமாகியது போலந்து. அந்நாட்டைக் கைப்பற்றி தென்கிழக்கு மற்றும் வடகிழக்கு பால்டிக் நாடுகளுக்குள் முடிந்த வரை ஊடுருவிக் கைப்பற்றுவது என்பது தான் இட்லரின் அறிவிக்கப் படாத திட்டமாகும்.
இந்த நிலையில் தான் கிழக்குப் பகுதியில் இருந்து போலந்துக்குள் நுழைந்தது சோவியத் செஞ்சேனை. இது குறித்து போர் அறிவிப்பு எதையும் சோவியத் யூனியன் வெளியிடவில்லை, ஏனெனில் அந்தத் தேதியில் போலந்து என்ற தனி நாடே இல்லாமல் போனது, அரசும் இருக்கவில்லை. ஆனால் போலந்து மீது சோவியத் யூனியன் படையெடுத்தது என்று பொய்யர்கள் இன்று வரை பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். பிரித்தானிய தலைவர்கள் கூட இட்லரைத் தடுத்து நிறுத்துவதில் இந்த நடவடிக்கை அவசியமாக இருந்தது என்பதை வேறு வழியின்றி ஒப்புக் கொள்ள வேண்டி இருந்தது.
மேலும், போலந்து மக்கள் செஞ்சேனையை எதிர்க்கவில்லை என்பது மட்டுமின்றி அதனை மகிழ்ச்சியுடன் வரவேற்று சோவியத் டாங்கிகளுக்கு மாலை அணிவித்தனர்.
அது மட்டுமின்றி, மிகத் தெளிவாகத் திட்டமிடப் பட்டு அதை விடத் துல்லியமாக நிறைவேற்றப் பட்ட அசாத்தியமான ராணுவ நடவடிக்கையாக அது இருந்தது என்பது மிக முக்கியமாகக் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றாகும்.
“ஒரு வினாடி கூடத் தவறாமல் அதற்கு நேரம் குறிக்கப் பட்டதாகத் தோன்றுகிறது.... அரைநாள் முன்னதாக இது நடந்திருந்தால், போலந்தில் எங்காவது போலந்து அரசு இருந்திருக்கும், ருஷ்யப் படைகள் நுழைந்தது போர் என்று பிரகடனப் படுத்தப் பட்டு இருக்கும். மாறாக அரை நாள் தாமதமாக நடந்திருந்தால் தெற்கு ருமேனியாவிற்குள்ளும், வடக்கில் பால்டிக் நாடுகளுக்குள்ளும் ஜெர்மானியர்கள் நுழைந்து கொண்டிருப்பதை ருஷ்யர்கள் வேடிக்கை பார்க்க நேரிட்டு இருக்கும். போலந்து அரசு ஓடி மறைந்து விட்ட – ஆனால் ஜெர்மானியர்கள் போர் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களான லிவோவ் மற்றும் வில்னாவைக் கைப்பற்றுவதற்கு முன்னர் – அந்தத் துல்லியமான அரைநாளில் செஞ்சேனை அங்கே நுழைந்தது” என்று அன்னா லூயி ஸ்டிராங் இது பற்றிக் குறிப்பிட்டார்.
சோவியத் யூனியனுக்கு எதிரான நாஜித் தாக்குதலை ஓரளவு தள்ளிப் போடவும், இட்லருக்கு மிகச் சரியான எச்சரிக்கை விடுப்பதற்கும் ஆன செயலாக இது மாறியது.
இதனைத் தான் போலந்தை சோவியத் யூனியன் ஆக்கிரமித்தது என்பதாக எந்த விதப் புரிதலும் இல்லாத டிராட்ஸ்கிய சல்லிகளும் அவர்களது மேற்குலக எஜமானர்களும் இன்று வரை குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
சோவியத் தாயகத்தை வீழ்த்துவதற்கான ஒரு வாய்ப்பு பறிபோனதே என்ற ஆதங்கம் அவர்களை இப்படிப் பேச வைக்கிறது என்பதே உண்மை.

  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...