சனி, 6 பிப்ரவரி, 2021

லெனின் இறுதிச் சடங்கில் டிராட்ஸ்கி கலந்து கொள்ளாதது ஏன்?

 



ஜனவரி 21, 1924ஆம் ஆண்டு அன்று லெனின் உயிரிழந்தார். அன்று மருத்துவ ஓய்வு எடுப்பதற்காக டிராட்ஸ்கி சுகுமி என்னும் ஊருக்குச் சென்று கொண்டிருந்தார். டிப்லிஸ் நகரத்தை வந்தடைந்த போது லெனின் உயிரிழந்த செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் ஆகவும், லெனினுக்குப் பிறகு சோவியத் அதிபர் பதவிக்கு வந்திருக்க வேண்டியவர் என்று மேற்குலகப் பத்திரிகையாளர்களால் முன்னிறுத்தப் பட்டவரும் ஆகிய டிராட்ஸ்கி லெனினது இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்ளவில்லை. 


மாறாக, லெனின் இறந்து விட்ட தகவல் கிடைத்த பின்னரும் கூட முன் கூட்டியே திட்டமிட்ட படி ஓய்வு எடுப்பதற்கான தனது பயணத்தைத் தொடர்ந்தார். சோவியத் யூனியன் முழுவதும் தனது மாபெரும் தலைவனின் இழப்பை எண்ணி வருந்தி, கண்ணீர் அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்த போது, தன்னை லெனினின் அரசியல் வாரிசு ஆகக் காட்டிக் கொள்ளும் டிராட்ஸ்கியோ ஒரே ஒரு அஞ்சலிச் செய்தி அனுப்பி விட்டு ஒரு ரிசார்டில் (Resort) உல்லாசமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார்! லெனினின் இறுதி நிகழ்வுகளில் அவர் பங்கு பெறாதது அவரது அரசியல் வாழ்வுக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைத்தது என்று கூறினால் அது கொஞ்சமும் மிகையாகாது. ஆனால் இது தனது அரசியல் வாழ்வுக்குச் சாவு மணி அடிக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை என்பது நிச்சயம். அக்கால சோவியத் அரசியல் நிகழ்வுகள் பற்றி எழுதிய அனைவரும் டிராட்ஸ்கியின் இந்தச் செயலை மாபெரும் அரசியல் தவறு என்றே குறிப்பிடுகின்றனர். தனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருந்த காரணத்தால் காகசஸ் பகுதியில் ஓய்வெடுக்கச் சென்று கொண்டு இருந்த போது இந்தத் தகவல் தனக்குக் கிடைத்ததால் லெனினது இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்ள முடியவில்லை என்று டிராட்ஸ்கி கூறியதைச் சுட்டிக் காட்டும் டேவிட் எம் கோலே என்னும் நூலாசிரியர், அவரது இடத்தில் ஸ்டாலின் இருந்திருந்தால் அவர் நிச்சயம் லெனின் சடலத்தின் அருகில் நின்றிருப்பார் என்று எழுதினார் (David M Cole. Joseph Stalin : Man of Steel, Rich & Cowan, 1942, London, Page 61).

 

லெனினது இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுந்த போது அதற்கு விசித்திரக் காரணம் ஒன்றைக் கூறினார் டிராட்ஸ்கி. அவர் எப்போதும் செய்வது போல இதற்கும் ஸ்டாலினைக் குற்றச்சாட்டினார்.

 

லெனின் இறந்த ஒரு சில மணி நேரங்களுக்குள் டிப்லிசியில் இருந்த டிராட்ஸ்கிக்கு அது தெரிவிக்கப்பட்டது. உடனடியாகத் தான் கிரெம்ளினைத் தொடர்பு கொண்டதாகவும், ஜனவரி 26 சனிக்கிழமை அன்று உடல் அடக்கம் செய்யப்பட இருப்பதால், அதற்குள் மாஸ்கோ வந்து சேர்வது சாத்தியம் இல்லை என்றும், ஆகவே தான் மருத்துவ சிகிச்சையைத் தொடரலாம் என்றும் தனக்குச் சொல்லப்பட்டதாகவும், ஆகவே தனக்கு வேறு வழி இருக்கவில்லை என்றும் டிராட்ஸ்கி தனது வாழ்க்கை வரலாறு நூலில் குறிப்பிடுகிறார்! பிறகு முன்னர் அறிவிக்கப்பட்டது போல சனிக்கிழமை அன்று அவரது உடல் அடக்கம் செய்யப்படவில்லை மாறாக, ஞாயிற்றுக் கிழமை அதாவது ஜனவரி 27 அன்று தான் உடல்அடக்கம் செய்யப்பட்டது என்றும் அதற்குள் தன்னால் எப்படியும் மாஸ்கோ சென்றடைந்து இருக்க முடியும் என்றும் கூறிய டிராட்ஸ்கி “இது நம்ப முடியாததாகத் தோன்றலாம், ஆனால் இறுதிச் சடங்கு நடைபெறும் தேதி குறித்த விசயத்தில் கூட நான் ஏமாற்றப்பட்டேன்” என்றார், தான் சொல்லும் கதை எந்த அளவுக்கு நம்பத் தகுந்தது ஆக இல்லை என்பது அவருக்கே நன்கு தெரிந்து இருந்தது.


இது குறித்து எழுதிய அனைத்து எழுத்தாளர்களும் டிராட்ஸ்கி கூற்றின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர். சோவியத் அரசின் போர் கமிசார் ஆக இருந்த டிராட்ஸ்கி உண்மையில் லெனினது இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள விரும்பி இருந்தால் மூன்று நாட்கள் பயணம் மேற்கொண்டு நிச்சயம் அதில் கலந்து கொண்டிருக்க முடியும். தேவைப்பட்டால் அதற்காக அவர்  ஒரு சிறப்பு விமானத்தையே கூடப் பயன்படுத்தி இருக்க முடியும். ஆனால் அதற்கான முயற்சி எதையும் டிராட்ஸ்கி மேற்கொள்ளவே இல்லை. மேலும், பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள அவரது ஆவணங்களில் அவருக்கு இவ்வாறு தவறான தகவல் அளிக்கப்பட்டதை உறுதி செய்யும் எந்த ஆவணங்களும் கிடைக்கவில்லை. டிராட்ஸ்கியின் கேவலமான ஈகோவைத் தவிர இந்தத் தவறுக்கு வேறெந்தக் காரணமும் சொல்ல முடியாது. உண்மையில் டிராட்ஸ்கியின் அரசியல் வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் நிகழ்வாக அது அமைந்திருந்தது என்று கூறினால் அது மிகையாகாது.


  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...