செவ்வாய், 25 ஜனவரி, 2022

 கிரோவ் படுகொலையும் ஸ்டாலினும்


பாகம் - 4


இவ்வாறாக, கிரோவ் படுகொலைக்கு ஸ்டாலினைக் குற்றவாளியாக ஆக்கும் டிராட்ஸ்கிய மற்றும் மேற்குலக முதலாளித்துவவாதிகளின் வெறித்தனமான முயற்சிகள், மேற்கண்ட சாதாரண உண்மைகளின் முன்னர் மிகக் கேவலமாகத் தோற்றுப் போகின்றன. ஆனால், உண்மையில் கிரோவைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் டிராட்ஸ்கிய மற்றும் உள்நாட்டு சீர்குலைவுவாதிகளுக்கும் அவர்களது மேற்கத்திய எஜமானர்களுக்கும் தான் இருந்தது. கிரோவின் அரசியல் செயல்பாடுகளால் பாதிக்கப் பட்டவர்களாக அவர்களே இருந்தார்கள். சோவியத் யூனியனுக்கு எதிரான தங்களது கொலைகாரச் சதியின் முக்கியப் பகுதியாக, கிரோவைத் திட்டமிட்ட முறையில் கொலை செய்த அவர்கள், அதற்கான பழியையும் ஸ்டாலின் தலையில் சுமத்துவதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அடிக்க முடியும் என்று முட்டாள்தனமாகக் கணக்குப் போட்டனர். ஸ்டாலினின் மெய்க்காவல் படைத் தலைவராக இருந்த ஏ.டி. ரைபின், இதையும் அப்பட்டமாக அம்பலப்படுத்துகிறார்.

 

இன்று, ஸ்டாலின் இப்படிச் செய்தார், அப்படிச் செய்தார், கிரோவைக் கொலை செய்தார் என்று இன்று பலர் கூறுகிறார்கள். வாய்க்கு வந்தபடிப் பேசுவதற்கு பதிலாக வரலாறைத் திரும்பிப் பாருங்கள். 1921-ஆம் ஆண்டு முதல்போர்முனையை நேர்ப்படுத்துவதற்காக அஸ்த்ரகான் பகுதியை உள்நாட்டுப் போர்க்கால எதிரிகளிடம் விட்டுக் கொடுப்பது என்று டிராட்ஸ்கி முடிவு செய்த காலம் முதல்கிரோவ் டிராட்ஸ்கியை விமரிசனம் செய்து வந்தார் என்பதை நினைவு படுத்திக்கொள்ள வேண்டும். இந்த விசயத்தில் லெனின் கிரோவை ஆதரித்தார், அந்தப் பகுதியில் உள்நாட்டுப் போர்க்கால எதிரிகள் தோற்கடிக்கப் பட்டனர் என்பதால் டிராட்ஸ்கி கிரோவை ஒரு போதும் மன்னிக்கவில்லை. மற்றொரு சோஷலிஸ்டு புரட்சியாளனான வாசர்மேன், கிரோவ் முடியாட்சி ஆதரவாளராக இருந்தார் என்று ஒரு வதந்தியைக் கிளப்பத் தொடங்கினான். அந்தச் சமயத்தில் கிரோவ் கைது செய்யப்பட்டார் என்றாலும் அவரது எதிரிகளால் அவரை ஒழித்துக்கட்ட முடியவில்லை. இந்த ஆத்திரமூட்டும் செயலை அம்பலப்படுத்திய விசாரணைத் தீர்ப்பாயம், வாசர்மேனுக்கு மரணதண்டனை வழங்கியது. டிராட்ஸ்கி எப்படிப்பட்ட ஒரு எதிரி என்பதையும் அவரால் என்ன செய்ய முடியும் என்பதையும் நன்றாகவே அறிந்திருந்த போதிலும் கிரோவ் எப்போதும் டிராட்ஸ்கியை எதிர்த்தே வந்தார். 1927-ஆம் ஆண்டுலெனின் கிராடில் எதிர்த்தரப்பு தடுப்பு அரண்கள் மூடப்பட்டு விட்டனஎன்று அவர் கூறினார். கஜகஸ்தானில் குலாக்குகளுக்கு எதிரான பயங்கரமான ஆத்திரமூட்டும் செயல்களுக்காக கிரோவ் அவர்களை விமரிசனம் செய்ததை டிராட்ஸ்கியும் தற்போது பதுங்கி இருக்கும் எதிர்த்தரப்பும், யகோடாவும் எளிதாக விட்டு விடவில்லை. கிரோவைக் கொலை செய்வதில் கொலையாளிகள் வெற்றியடைய செய்வதற்காகத்தான், கிரோவைப் பாதுகாப்பதில் அவரது மெய்க்காவலர்கள் தீவிர ஆர்வம் காட்டவில்லை என்பதையே இது காட்டுகிறது.” (ஸ்டாலினுக்கு அருகிலிருந்து, ஒரு மெய்க்காவலரின் நினைவுக் குறிப்புகள், ஏ.டி. ரைபின், பொன்னுலகம் புத்தக நிலையம், 2021, பக்கம் 31-32). கிரோவைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் யாருக்கு இருந்தது என்பதை மெய்க்காவலர் படைத் தலைவராக ஏ.டி. ரைபின் மிகத் தெளிவாகவே எடுத்துக்கிறார்.

 

டிராட்ஸ்கியும் அவரது அடியொற்றி மேற்குலக ஊடகங்களும் கூறுவதைப் போல, கிரோவின் இறுதிக் காலம் வரையில் அவருக்கும் ஸ்டாலினுக்கும் எந்தப் பகையுணர்வும் இருக்கவில்லை என்பது மட்டுமின்றி, ஸ்டாலினின் மிக நெருங்கிய நண்பராக, நம்பிக்கைக்கு உரிய நெருக்கத் தோழராக கிரோவ் இருந்தார் என்பதை மேற்படி நேரடிச் சான்றுகள் ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன. கிரோவைக் கொலை செய்ய வேண்டிய எந்த அவசியமும் ஸ்டாலினுக்கு இருக்கவில்லை என்பதை அவை தெளிவாக்குகின்றன. 

 

அவதூறாளர்களின் பொய்ப் பரப்புரைக்கு மாறாக, டிராட்ஸ்கிக்கும், அவரை அடியொற்றிப் பின்பற்றிய முதலாளித்துவ ஆதரவு சீர்குலைவு சக்திகளுக்கும் மட்டுமே கிரோவைக் கொலை செய்வதற்கான நோக்கம் (motive) இருந்தது உண்மை என்பதையும் இது தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. இதனை விரிவாகப் பேச வேண்டும்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...