செவ்வாய், 25 ஜனவரி, 2022

 கிரோவ் படுகொலையும் ஸ்டாலினும்


பாகம் - 3



 

அண்மைக் காலத்தில் ரகசிய நீக்கம் செய்யப்பட்ட சோவியத் ஆவணங்கள், கிரோவ் படுகொலையில் ஸ்டாலினைத் தொடர்பு படுத்தும் முயற்சியின் பகுதியாக கூறப்பட்ட கதைகள் அனைத்தையும் பொய்யென நிரூபிக்கின்றன. இத்தகைய ரகசிய நீக்கம் செய்யப்பட்ட ஆவணங்களை விரிவாக ஆய்வு செய்த ஆய்வாளர்கள் கூறிய கருத்துகள் முக்கியத்துவம் வாய்ந்தவை. கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தால் வெளியிடப்பட்ட Stalinist Terror New Perspectives என்ற நூல் ஏராளமான தகவல்களைத் தருகிறது.

 

ஆர்லோவ் என்பவர் எழுதிய Secret History of Stalins Crimes என்ற நூல் இத்தகைய அவதூறுகளுக்கு முக்கியத் தொடக்கமாக இருந்தது என்பதைப் பார்த்தோம். கோர்பசேவ் காலத்தில் நியமிக்கப்பட்ட யாகொவ்லோவ் கமிஷன், ஆர்லோவின் கூற்றுகள் அனைத்தும் பொய்யானவை என்ற முடிவுக்கு வந்தது. மேலும் “ஒரு தரப்பான, மேம்போக்கான, உறுதி செய்யப்படாத தகவல்கள், புரளிகள் மற்றும் அனுமானங்கள் ஆகியவை மட்டுமே இந்தக் கொலையில் ஸ்டாலினுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை ஆதரிக்கின்றன” என்று அந்தக் கமிஷன் முடிவு செய்தது (Stalinist Terror New Perspectives, Edited by J. Arch Getty and Roberta T Manning, Cambridge University Press, 1993, Page 47).

 

இதனை ஏற்க விரும்பாத சோவியத் கம்யூனிஸ்டு கட்சி மத்திய கமிட்டி அந்த அறிக்கை வெளியிடப் படாமல் தடை செய்தது என்கிறார் ஆர்ச் கெட்டி. இது போன்ற பல உண்மைகளைப் பட்டியலிடும் மேற்காண் ஆசிரியர், ஸ்டாலின் தான் கிரோவைக் கொலை செய்ய ஏற்பாடு செய்தார் என்ற அனுமானம் தற்போது ருஷ்யாவில் அதிகாரபூர்வமாக ஏற்கப்படுவதில்லை எனத் தெளிவுபடத் தெரிவிக்கிறார். பொலிட்பீரோ குழுவின் அறிக்கை அப்பட்டமாக அதை மறுத்து விட்டது, பாடநூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகள் ஆகியவை அந்த நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கி விட்டன என்கிறார்.

 

சரியான உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட்டால் ஸ்டாலின் குறித்த எந்த அவதூறுகளையும் முன்வைப்பவர்கள், இப்படித் தான் அவக்கேடான முறையில் பின்வாங்க வேண்டி இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...