செவ்வாய், 25 ஜனவரி, 2022

கிரோவ் படுகொலையும் ஸ்டாலினும்

பாகம் - 2



 

ஸ்டாலினின் கடுமையான கண்ணோட்டத்தையும் (hardline views) சர்வாதிகாரப் போக்கையும் கிரோவ் எதிர்த்தார் என்றும், கட்சிக்குள் ஸ்டாலினுக்கு எதிராகப் புதிதாகத் தோன்றி வந்த மிதவாதத் தரப்பை அவர் பிரதிநிதித்துவப் படுத்தினார் என்றும், அதனைப் பொறுத்துக் கொள்ள விரும்பாத ஸ்டாலின் அவரைத் தீர்த்துக்கட்ட உத்திரவிட்டார் என்றும் அவதூறாளர்கள் கட்டுக்கதைகளை அடுக்கினர். கட்சியின் பதினேழாவது காங்கிரசில் கிரோவ் பலத்த கரகோஷம் மற்றும் ஆதரவைப் பெற்றார், ஸ்டாலினைக் காட்டிலும் பல மடங்கு அதிக ஆதரவு வாக்குகளைப் பெற்றார், இதனால் கிரோவைத் தனக்கு ஒரு அச்சுறுத்தலாகக் கருதி என்.கே.வி.டி. அமைப்பின் உதவியுடன் கிரோவைக் கொலை செய்தார் என்றெல்லாம் கூறினர்.

 

ஆனால் ஸ்டாலினுக்கும் கிரோவுக்கும் இடையிலான உறவு உண்மையில் மிக சுமுகமானதாகவும், நெருக்கமானதாகவும் மட்டுமே இருந்தது. இருவருக்கும் இடையிலான உறவு சீர்கெட்டு இருந்தது என்பதற்கு ஆணித்தரமான முதன்மைச் சான்றுகள் எதையும் அவர்களால் முன்வைக்க இயலவில்லை. ஆனால், இந்த அவதூறு வெறும் கட்டுக்கதை தான் என்பதை நிரூபிக்கவும் இருவருக்கும் இடையிலான உறவு மிகச் சுமுகமாகவும் இருந்தது என்பதை நிரூபிக்கவும் நம்மால் முதன்மைச் சான்றை முன்வைக்க முடியும். ஸ்டாலினின் மெய்க்காவலர் படைத் தலைவராக இருந்த அலெக்சி ரைபின் அவர்களை விட இது குறித்து முதன்மைச் சான்றை முன்வைக்கக் கூடியவர் வேறெவரும் இருக்க முடியாது. அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவுகள் எப்படி இருந்தன என்பது குறித்து தனது நினைவுக் குறிப்புகளில் அலெக்சி ரைபின் பின்வருமாறு கூறினார் :

 

கிரோவ் அடிக்கடி ஸ்டாலினின் இருப்பிடத்திற்கு வருவார், அவரது படுக்கையில் கூடத் தூங்குவார். அவர்கள் இருவரும் ஒன்றாக நீராவிக் குளியலும் எடுத்துக் கொள்வார்கள். பொலிட்பீரோவில் இருந்த வேறு எவருக்கும் ஸ்டாலினுடன் அத்தகைய தோழமையும் புரிதலும் இருக்கவில்லை. கிரோவ் ஒரு திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள போல்ஷிவிக் என்று ஸ்டாலின் மிகவும் பெருமிதம் கொண்டிருந்தார். கடைசி காங்கிரசில் கிரோவ் மிகத் திறமையாகச் செயல்பட்டார், புகாரின், ஜினோவியேவ் மற்றும் கமீனவ் ஆகியோரைக் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், டிராட்ஸ்கி குறித்து அவர் பின்வருமாறு கூறினார், இதுபோன்ற புனிதமான ஒரு காங்கிரசில் அவரது பெயர் சொல்லப்படுவதற்காகவே அவரை மூன்று முறை தண்டிக்கலாம்” (ஸ்டாலினுக்கு அருகிலிருந்து, ஒரு மெய்க்காவலரின் நினைவுக் குறிப்புகள், ஏ.டி. ரைபின், பொன்னுலகம் புத்தக நிலையம், 2021, பக்கம் 28).

 

ஸ்டாலினின் மெய்க்காவலர் அலெக்சி ரைபின் இது குறித்து தொடர்ந்து கூறுவதைக் கவனிப்பது அவசியம் ஆகும். “…ஜனவரி ஒன்றாம் தேதி.. அன்று மாலை தோழர் ஸ்டாலின் மற்றும் எனது கமாண்டன்ட் ஸ்மிர்னோவ், கமிசார் லியுபோவிட்ஸ்கி ஆகியோராடு நானம் கிரோவை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். ஸ்டாலின் கிரோவை ஆரத் தழுவியபடி, அவருடன் ரெட் புல்லட் என்றழைக்கப்பட்ட ரயிலின் பெட்டிக்கு உள்ளே வரை கொண்டு போய் விட்டார். டிசம்பர் 1 அன்று கிரோவ் படுகொலை செய்யப்பட்டார். டிசம்பர் 2 அன்று மொலடோவ் மற்றும் வொரோஷிலோவ் ஆகியோர் உடனடியாக லெனின்கிராடுக்கு விரைந்தனர். அது ஸ்டாலினின் உயிருக்கு ஆபத்தான காலம். எனவே, செர்ழீன்ஸ்கி தலைமையிலான பாதுகாப்புப் பிரிவு, லெனின்கிராடுக்குச் செல்லும் வழி நெடுகிலும் நெடுஞ்சாலையின் இருபுறங்களில் எங்களுக்குப் பாதுகாப்பாக நின்றது. ஸ்டாலின் மிகவும் துயரமுற்றவராக இருந்தார், அவரது முகம் கருத்துப் போயிருந்தது, அவரது முகம் துடிப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இறந்து கிடந்த கிரோவின் உதட்டில் முத்தமிட்டு, “விடை கொடுக்கிறேன் எனது இனிய நண்பனேஎன்று அழுதபடியே கூறினார் ஸ்டாலின். ஸ்டாலினின் மனைவியின் இறப்புக்குப் பின்னர், ஸ்டாலினோடு கிரோவ் அளவுக்கு நெருக்கமாக இருந்த நண்பர்கள் வேறு யாரும் கிடையாது.” என்று ஆணித்தரமாகக் கூறினார் ஏ.டி. ரைபின் (ஸ்டாலினுக்கு அருகிலிருந்து, ஒரு மெய்க்காவலரின் நினைவுக் குறிப்புகள், ஏ.டி. ரைபின், பொன்னுலகம் புத்தக நிலையம், 2021, பக்கம் 29). ஸ்டாலினுக்கும் கிரோவ்க்கும் இடையிலான உறவு பற்றிய டிராட்ஸ்கிய மற்றும் முதலாளித்துவக் கட்டுக்கதைகளைத் தாண்டி, உண்மை வேறெங்கோ ஒரு தளத்தில் இருந்தது என்பதை இதை விடத் தெளிவாக யாரும் எடுத்துக் காட்டி இருக்க முடியாது. 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...