செவ்வாய், 25 ஜனவரி, 2022

 

கிரோவ் படுகொலையும் ஸ்டாலினும்


பாகம் - 1




 


செர்கீ கிரோவ்.


லெனின்கிராடு பிராந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக இருந்த இவர், டிசம்பர் 1, 1934 அன்று நிகோலயேவ் என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். ஸ்மோல்னியில் மூன்றாவது மாடியில் இருந்த தனது அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்த கிரோவை எதிர்பார்த்துக் காத்திருந்த கொலைகாரன் நிகோலயேவ், அவர் கடந்து சென்ற பின்னர், பின்னால் சில அடி தூரத்தில் இருந்து அவரைத் துப்பாக்கியால் சுட்டான். தலையின் பின்பகுதியில் குண்டு பாய்ந்து கிரோவ் அதே இடத்தில் உயிரிழந்தார்.

 

1900ஆம் ஆண்டுகளின் முற்பகுதியில் இருந்து ருஷ்ய சமூக ஜனநாயகக் கட்சியில் இணைந்து பணியாற்றிய கிரோவ், 1905ஆம் ஆண்டு புரட்சியில் பங்கு பெற்றுப் பல முறை ஜார் அரசால் சிறை வைக்கப்பட்டவர் ஆவார். உள்நாட்டுப் போர்க் காலத்தில் செஞ்சேனையின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக இருந்த கிரோவ், அஸ்திரகான் பகுதியில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு எதிர்ப்புரட்சியாளர்களை ஒடுக்கினார்.  1926ஆம் ஆண்டில் டிராட்ஸ்கி-ஜினோவியேவ் கூட்டத்தால் சீர்குலைக்கப் பட்ட லெனின்கிராடு கட்சி அமைப்பைச் சரிசெய்யும் மிக முக்கியமான பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அந்த ஆண்டில் லெனின்கிராடு பிராந்திய கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கிரோவ், கம்யூனிஸ்டு கட்சியின் நம்பகமான தூண்களில் ஒருவராகத் திகழ்ந்தார். 1930ஆம் ஆண்டு கட்சி மத்தியக் கமிட்டி பொலிட்பீரோவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அந்த ஆண்டுகளில் சோவியத் பொருளாதாரத்தை சோசலிசப் பாதையில் முன்னேற்றுவதற்காகக் கட்சி மேற்கொண்ட முக்கிய நடவடிக்கைகளாக இருந்த இயந்திர மயமாக்கல் மற்றும் கூட்டுப் பண்ணை மயமாக்கல் போன்றவற்றை முழுமையாக ஆதரித்த கிரோவ், அவற்றை வெற்றி பெறச் செய்வதற்காக முழு வேகத்தோடு பாடுபட்டார். அன்றைய சோவியத் யூனியனில் ஸ்டாலினுக்கு அடுத்த படியாக இருந்த இரண்டாம் நிலைத் தலைவர்களில் கிரோவ் முக்கியமானவராகவும், கட்சியினரால் அதிகம் விரும்பப் பட்டவராகவும் இருந்தார். சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் 17வது காங்கிரசில் மிக அதிக விருப்ப வாக்குகளைப் பெற்ற தலைவராக அவர் இருந்தார். இப்படிப் பட்ட ஒரு தலைவர் ஏன் கொல்லப்பட வேண்டும்?

 

இந்தக் கிரோவ் படுகொலை ஒரு மோசமான துன்பியல் நிகழ்வு என்பதில் எந்த ஐயமும் கிடையாது. சோவியத் கம்யூனிஸ்டு கட்சிக்கு இது ஒரு மாபெரும் இழப்பாக இருந்தது என்பதை அதன் எதிரிகள் கூட ஒப்புக் கொள்ள வேண்டி இருக்கும். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் நிலைத் தலைவரை, மக்களாலும் கம்யூனிஸ்டுகளாலும் அதிகம் நேசிக்கப் பட்ட ஒரு செயல்வீரரைக் கொலை செய்ய வேண்டிய அவசியம் என்ன? அத்தகைய அவசியம் யாருக்கு இருந்திருக்க முடியும்? இத்தகைய படுகொலையை அரங்கேற்றியவர்கள் அதன் மூலம் சாதிக்க நினைத்தது என்ன? இதனால் பயனடையக் கூடியதாக இருந்தவர்கள் யார்? அவரது படுகொலையால் இழப்பைச் சந்திக்கக் கூடியவர்கள் யார்? இவை எல்லாவற்றையும் விட, அவர் உயிர்வாழ்ந்த காலத்தில் யாரை எதிரியாகக் கருதினார், யாரை எதிர்த்து அதிகம் போராடினார், அவரால் பாதிக்கப்பட்டவராக இருக்கக் கூடியவர்கள் யார்? அவரைக் கொலை செய்ய வேண்டும் என்ற வெறி யாருக்கு இருந்திருக்க முடியும்? இது போன்ற கேள்விகளுக்கு பதில் தேடாமல் இது பற்றிய உண்மைகளைக் கண்டறிய முடியாது. அவரது படுகொலைக்குப் பின்னர் சோவியத் எதிரிகளும், டிராட்ஸ்கிய மற்றும் முதலாளித்துவ (இரண்டுக்கும் பெரிதாக வேறுபாடுகள் எதுவும் இல்லை தான்) எடுபிடிகளும் உடனடியாகவே தங்களது அவதூறுப் பிரச்சாரத்தைத் துவக்கினர்.

 

இவ்வாறு கிரோவ் படுகொலைக்கு ஸ்டாலின் தான் காரணம் என்ற அவதூறைத் துவக்கியவர்களில் முக்கியமானவர் டிராட்ஸ்கி ஆவார். கிரோவ் படுகொலை செய்யப்பட்ட அதே 1934 டிசம்பர் மாதத்திலேயே On the Kirov Assassination என்ற கட்டுரையில் ஸ்டாலினைத் தொடர்பு படுத்த முயற்சித்தார் டிராட்ஸ்கி.

 

மேற்குலகுக்குத் தப்பியோடி சோவியத் எதிர்ப்பாளர் ஆன ஆர்லோவ் என்ற மென்ஷிவிக் நபர், கிரோவுக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் பல கருத்து வேறுபாடுகள் இருந்தன என்று கூறினார். என்.கே.வி.டி அமைப்பின் அதிகாரிகளிடம் இருந்து தான் கேட்டதாகக் கூறிய கிசுகிசுச் செய்திகளையே இதற்குச் “சான்று” ஆக அவர் முன்வைத்தார்! அவர் எழுதிய Secret History of Stalins Crimes என்ற புத்தகமே இன்று வரை இது குறித்து முன்வைக்கப் படும் அனைத்துப் பொய்களுக்கும் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது.

 

பின்னர் கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்கள், சோவியத் அதிருப்தியாளர்கள், முதலாளித்துவ பத்திரிகையாளர்கள் மற்றும் உளவுத் துறை ஏஜெண்டுகள் ஆகியோர் இந்தக் குற்றச்சாட்டை மேலும் விரிவுபடுத்தி, அதனைச் சுற்றி ஏராளமான கட்டுக்கதைகளை இணைத்து அதனைப் பூதாகாரமாக சோடித்தனர். உலகெங்கிலும் உள்ள தீவிர கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்களுக்குப் பிடித்த அவதூறாளர் ஆன ராபர்ட் கான்குவெஸ்டும், ஸ்டெபன் கோஹன் போன்றவர்களும் இதனை வெறித்தனமான முன்னெடுத்தனர். ஆனால் வழக்கம் போல இந்த வன்முறை நிகழ்வுடன் ஸ்டாலினைத் தொடர்பு படுத்தக் கூடிய எந்த நேரடியான சான்றுகளும் இருக்கவில்லை. ஏன், மறைமுகமாக சந்தேகத்தை எழுப்பக் கூடிய அரைகுறைச் சான்றுகள் எதையும் கூட ஸ்டாலின் எதிர்ப்பாளர்கள் முன்வைக்கவில்லை. வழக்கம் போலவே இந்தக் குற்றச்சாட்டும், ஆதாரமற்ற அனுமானங்கள், உறுதி செய்யப்படாத கிசுகிசுக்கள் மற்றும் ஓடுகாலிகள் கூறியதாகச் சொல்லப்பட்ட செவிவழிச் செய்திகள் ஆகியவற்றை மட்டுமே சான்றாக முன்வைத்தன. 

 

ஸ்டாலினின் கடுமையான கண்ணோட்டத்தையும் (hardline views) சர்வாதிகாரப் போக்கையும் கிரோவ் எதிர்த்தார் என்றும், கட்சிக்குள் ஸ்டாலினுக்கு எதிராகப் புதிதாகத் தோன்றி வந்த மிதவாதத் தரப்பை அவர் பிரதிநிதித்துவப் படுத்தினார் என்றும், அதனைப் பொறுத்துக் கொள்ள விரும்பாத ஸ்டாலின் அவரைத் தீர்த்துக்கட்ட உத்திரவிட்டார் என்றும் அவதூறாளர்கள் கட்டுக்கதைகளை அடுக்கினர். கட்சியின் பதினேழாவது காங்கிரசில் கிரோவ் பலத்த கரகோஷம் மற்றும் ஆதரவைப் பெற்றார், ஸ்டாலினைக் காட்டிலும் பல மடங்கு அதிக ஆதரவு வாக்குகளைப் பெற்றார், இதனால் கிரோவைத் தனக்கு ஒரு அச்சுறுத்தலாகக் கருதி என்.கே.வி.டி. அமைப்பின் உதவியுடன் கிரோவைக் கொலை செய்தார் என்றெல்லாம் கூறினர்.

 

ஆனால் ஸ்டாலினுக்கும் கிரோவுக்கும் இடையிலான உறவு உண்மையில் மிக சுமுகமானதாகவும், நெருக்கமானதாகவும் மட்டுமே இருந்தது. இருவருக்கும் இடையிலான உறவு சீர்கெட்டு இருந்தது என்பதற்கு ஆணித்தரமான முதன்மைச் சான்றுகள் எதையும் அவர்களால் முன்வைக்க இயலவில்லை. ஆனால், இந்த அவதூறு வெறும் கட்டுக்கதை தான் என்பதை நிரூபிக்கவும் இருவருக்கும் இடையிலான உறவு மிகச் சுமுகமாகவும் இருந்தது என்பதை நிரூபிக்கவும் நம்மால் முதன்மைச் சான்றை முன்வைக்க முடியும். ஸ்டாலினின் மெய்க்காவலர் படைத் தலைவராக இருந்த அலெக்சி ரைபின் அவர்களை விட இது குறித்து முதன்மைச் சான்றை முன்வைக்கக் கூடியவர் வேறெவரும் இருக்க முடியாது. அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவுகள் எப்படி இருந்தன என்பது குறித்து தனது நினைவுக் குறிப்புகளில் அலெக்சி ரைபின் பின்வருமாறு கூறினார் :

 

கிரோவ் அடிக்கடி ஸ்டாலினின் இருப்பிடத்திற்கு வருவார், அவரது படுக்கையில் கூடத் தூங்குவார். அவர்கள் இருவரும் ஒன்றாக நீராவிக் குளியலும் எடுத்துக் கொள்வார்கள். பொலிட்பீரோவில் இருந்த வேறு எவருக்கும் ஸ்டாலினுடன் அத்தகைய தோழமையும் புரிதலும் இருக்கவில்லை. கிரோவ் ஒரு திறமையான மற்றும் அர்ப்பணிப்புள்ள போல்ஷிவிக் என்று ஸ்டாலின் மிகவும் பெருமிதம் கொண்டிருந்தார். கடைசி காங்கிரசில் கிரோவ் மிகத் திறமையாகச் செயல்பட்டார், புகாரின், ஜினோவியேவ் மற்றும் கமீனவ் ஆகியோரைக் கடுமையாக விமர்சனம் செய்தார். மேலும், டிராட்ஸ்கி குறித்து அவர் பின்வருமாறு கூறினார், இதுபோன்ற புனிதமான ஒரு காங்கிரசில் அவரது பெயர் சொல்லப்படுவதற்காகவே அவரை மூன்று முறை தண்டிக்கலாம்” (ஸ்டாலினுக்கு அருகிலிருந்து, ஒரு மெய்க்காவலரின் நினைவுக் குறிப்புகள், ஏ.டி. ரைபின், பொன்னுலகம் புத்தக நிலையம், 2021, பக்கம் 28).

 

ஸ்டாலினின் மெய்க்காவலர் அலெக்சி ரைபின் இது குறித்து தொடர்ந்து கூறுவதைக் கவனிப்பது அவசியம் ஆகும். “…ஜனவரி ஒன்றாம் தேதி.. அன்று மாலை தோழர் ஸ்டாலின் மற்றும் எனது கமாண்டன்ட் ஸ்மிர்னோவ், கமிசார் லியுபோவிட்ஸ்கி ஆகியோராடு நானம் கிரோவை ரயில் நிலையத்திற்கு அழைத்துச் சென்றோம். ஸ்டாலின் கிரோவை ஆரத் தழுவியபடி, அவருடன் ரெட் புல்லட் என்றழைக்கப்பட்ட ரயிலின் பெட்டிக்கு உள்ளே வரை கொண்டு போய் விட்டார். டிசம்பர் 1 அன்று கிரோவ் படுகொலை செய்யப்பட்டார். டிசம்பர் 2 அன்று மொலடோவ் மற்றும் வொரோஷிலோவ் ஆகியோர் உடனடியாக லெனின்கிராடுக்கு விரைந்தனர். அது ஸ்டாலினின் உயிருக்கு ஆபத்தான காலம். எனவே, செர்ழீன்ஸ்கி தலைமையிலான பாதுகாப்புப் பிரிவு, லெனின்கிராடுக்குச் செல்லும் வழி நெடுகிலும் நெடுஞ்சாலையின் இருபுறங்களில் எங்களுக்குப் பாதுகாப்பாக நின்றது. ஸ்டாலின் மிகவும் துயரமுற்றவராக இருந்தார், அவரது முகம் கருத்துப் போயிருந்தது, அவரது முகம் துடிப்பது வெளிப்படையாகத் தெரிந்தது. இறந்து கிடந்த கிரோவின் உதட்டில் முத்தமிட்டு, “விடை கொடுக்கிறேன் எனது இனிய நண்பனேஎன்று அழுதபடியே கூறினார் ஸ்டாலின். ஸ்டாலினின் மனைவியின் இறப்புக்குப் பின்னர், ஸ்டாலினோடு கிரோவ் அளவுக்கு நெருக்கமாக இருந்த நண்பர்கள் வேறு யாரும் கிடையாது.” என்று ஆணித்தரமாகக் கூறினார் ஏ.டி. ரைபின் (ஸ்டாலினுக்கு அருகிலிருந்து, ஒரு மெய்க்காவலரின் நினைவுக் குறிப்புகள், ஏ.டி. ரைபின், பொன்னுலகம் புத்தக நிலையம், 2021, பக்கம் 29). ஸ்டாலினுக்கும் கிரோவ்க்கும் இடையிலான உறவு பற்றிய டிராட்ஸ்கிய மற்றும் முதலாளித்துவக் கட்டுக்கதைகளைத் தாண்டி, உண்மை வேறெங்கோ ஒரு தளத்தில் இருந்தது என்பதை இதை விடத் தெளிவாக யாரும் எடுத்துக் காட்டி இருக்க முடியாது. 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...