ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

சீனப் புரட்சியைத் தடுத்தாரா தோழர் ஸ்டாலின்? - 1



ஸ்டாலின் சீனாவில் புரட்சி நடத்த விடாமல் தடுத்தார் என்று தோழர் மாவோ குற்றம் சாட்டியதாக டிராட்ஸ்கியவாதிகள் தொடர்ந்து தேய்ந்த ரிகார்டு போலப் பேசி வருகிறார்கள். இதன் மூலம் தோழர் ஸ்டாலினை சர்வதேச கம்யூனிசத்திற்கும் பாட்டாளிவர்க்க சர்வாதிகார அரசியலுக்கும் எதிரானவர் என்று சித்தரிக்க அவர்கள் முயல்கின்றனர். மேலும் இதன் மூலம் தோழர் ஸ்டாலினை எதிர்க்கும் தங்களைப் புரட்சியாளர்கள் என்று காட்டிக் கொள்வது தான் அவர்களது மறைமுக நோக்கம் ஆகும். அது மட்டுமின்றி, இத்தகைய குற்றச்சாட்டை முன்வைப்பதன் மூலம் தோழர் மாவோவுக்கும் தோழர் ஸ்டாலினுக்கும் பகைமை உணர்வு இருந்தது போலவும், சீனப் புரட்சியைக் கொண்டுவருவதற்கு அவரும் சீனக் கம்யூனிஸ்டு கட்சியும் மேற்கொண்ட முயற்சிகளுக்கு தோழர் ஸ்டாலின் முட்டுக்கட்டையாக இருந்தது போலவும், ஸ்டாலின் ஏற்படுத்திய தடைகளைத் தாண்டியே மாவோ சீனப் புரட்சியை நடத்தி முடித்தார் என்பது போன்றதொரு போலியான சித்திரத்தை உருவாக்குவது அவர்களது நோக்கமாக இருக்கிறது.

 

ஏப்ரல் 25, 1956ஆம் ஆண்டு, சீன கம்யூனிஸ்டு கட்சி மத்திய கமிட்டியின் பொலிட்பீரோ கூட்டத்தில் பேசிய தோழர் மாவோ, விடுதலைப் போர் நடைபெற்ற காலத்தில், ஸ்டாலின் முதலில் புரட்சியைத் தொடர வேண்டாம் என்று கட்டளையிட்டார், உள்நாட்டுப் போர் வெடித்தால், சீன நாடு தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் அபாயத்தை எதிர்கொள்வதாகக் கூறி. பின்னர் சண்டை வெடித்தபோது, அவர் எங்களை பாதியளவு நம்பிக்கையுடனும், பாதியளவு அவநம்பிக்கையுடனும் எடுத்துக் கொண்டார்என்று குறிப்பிட்டார்.

 

பின்னர், செப்டம்பர் 24, 1962ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்டு கட்சி எட்டாவது மத்தியக் கமிட்டியின் பத்தாவது பிளீனம் மாநாட்டில் உரையாற்றிய தோழர் மாவோ இது தொடர்பாகப் பின்வருமாறு கூறினார்:

 

“1945ஆம் ஆண்டு, அவர்கள் சீனாவை புரட்சி செய்ய அனுமதிக்கவில்லை. சீனா புரட்சி செய்வதைத் தடுக்க ஸ்டாலின் விரும்பினார், சீனாவில் உள்நாட்டுப் போர் ஏற்படக்கூடாது என்றும் சியாங் கே-ஷேக்குடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் சீன தேசம் அழிந்துவிடும் என்றும் அவர் கூறினார். ஆனால் அவர் சொன்னதை நாங்கள் பின்பற்றவில்லை. புரட்சி வெற்றி பெற்றது. புரட்சியின் வெற்றிக்குப் பின்னர் அவர் சீனா ஒரு யூகோஸ்லாவியா ஆக இருக்குமோ, நான் இரண்டாவது டிட்டோவாக மாறி விடுவேனோ என்று அவர் சந்தேகித்தார்…ஸ்டாலின் எப்போது எங்கள் மீது நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்? அமெரிக்க எதிர்ப்பு கொரிய உதவிப் போராட்டம் நடைபெற்ற 1950ஆம் ஆண்டின் குளிர்காலத்தில் இருந்து எங்கள் மீது அவர் நம்பிக்கை வைக்க ஆரம்பித்தார்

 

 

சீனாவில் புரட்சி செய்ய வேண்டாம் என்று தோழர் ஸ்டாலின் அறிவுறுத்தியது உண்மை என்றாலும் கூட, அது அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் ஒரு உள்நாட்டுப் போர் ஏற்படும் சூழ்நிலை வேண்டாம் என்று கருதியதாலோ, அல்லது சீனக் கம்யூனிஸ்டு கட்சி அதை வெற்றிகரமாகச் சமாளித்து புரட்சியை முன்னெடுக்குமா என்ற ஐயப்பாடு காரணமாகவோ தான் அவர் அப்படிச் சொன்னாரே தவிர இதற்கு வேறு காரணங்கள் கிடையாது. இரண்டு வெவ்வேறு தருணங்களில் தோழர் மாவோ கூறியதும் இதையே நிரூபிக்கிறது. ஸ்டாலின் தடுக்க முயற்சி செய்தார் என்று கூறுவதும் சக கம்யூனிஸ்டு கட்சியின் தலைவர் என்ற வகையிலும் உலகின் முதலாவது சோசலிசத் தாயகத்தின் காவலர் என்ற வகையிலும் அவர் கூறிய அறிவுறுத்தல் தானே தவிர வேறில்லை. அவர் சீனப் புரட்சிக்கு எதிரான நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ளவில்லை.

 

 

அது மட்டுமின்றி, சீனப் புரட்சி நடைபெற்ற காலத்திலும் தோழர் ஸ்டாலின் தோழர் மாவோ உடன் தொடர்பில் இருந்தார், சீனக் கம்யூனிஸ்டு கட்சிக்கு உதவிகளும், வழிகாட்டுதலும் செய்து வந்துள்ளார் என்பதை அவர்கள் இருவருக்கும் இடையில் நடைபெற்ற தந்தித் தொடர்பு ஆவணங்கள் தெரியப்படுத்துகின்றன. ஸ்டாலினின் உதவி இன்றி, சீனப் புரட்சி வெற்றி பெற்றிருக்க முடியாது என்பதை ஏகாதிபத்திய நாடுகளின் சிந்தனை மையங்களும் (think tank) கூட ஒப்புக் கொண்டுள்ளன.

 

எடுத்துக்காட்டாக, சோவியத் யூனியனின் அரசியல் மற்றும் இராணுவ உதவி இன்றி ஜின்ஜியாங் மாகாணத்தில் சீனக் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியைப் பிடித்திருக்க முடியாது என்பதை வில்சன் சென்டர் ஆவணக்காப்பக ஆவணங்கள் மூலம் அறிய முடிகிறது. சீனப் புரட்சியின் ஒவ்வொரு தருணத்திலும் ஸ்டாலினும் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியும் அளித்த இத்தகைய உதவி மற்றும் ஒத்துழைப்பே சீனப்புரட்சிக்குப் பிந்தைய சீன-சோவியத் நட்புறவுக்கு அடித்தளமாக இருந்தது.

 

உண்மை அப்படி இருக்கும் போது தோழர் மாவோ குறிப்பிட்டதை ஏதோ ஒரு சதித் திட்டம் என்கிற அளவுக்கு பெரிதுபடுத்திப் பேசுவது டிராட்ஸ்கியவாதிகள் தோழர் ஸ்டாலினை அவதூறு செய்வது என்ற தங்களது செயல்திட்டத்தை முன்னெடுப்பதற்காகச் செய்வது மட்டும் தானே தவிர வேறு எதுவும் இல்லை.

 

டிராட்ஸ்கியவாதிகளின் இந்தக் குற்றச்சாட்டைத் தெளிவுபடுத்துவதற்கு, தோழர் ஸ்டாலின் அவரது ஆளுமை மற்றும் அவரது பங்களிப்பு ஆகியவை குறித்து தோழர் மாவோ எத்தகைய கருத்துக் கொண்டிருந்தார் என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.

 

ஆகஸ்டு மாதம் 1937ஆம் ஆண்டு தோழர் மாவோ எழுதிய ‘முரண்பாடுகள் குறித்து’ என்ற கட்டுரையில் மார்க்ஸ் எங்கெல்ஸ் ஆகியோர் உருவாக்கிய இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள்முதல்வாதத் தத்துவத்தை எவ்வாறு லெனினும் ஸ்டாலினும் மேலும் வளர்த்தனர் என்பதைக் குறிப்பிட்டார். இந்தக் கட்டுரையில் மட்டுமே லெனின் மற்றும் ஸ்டாலின் என்று ஆறு முறை அவர் குறிப்பிட்டதைக் கவனிக்க வேண்டும். எனவே, மார்க்ஸ், எங்கெல்ஸ் மற்றும் லெனின் என்னும் வரிசையில் தத்துவ ஆசானாக தோழர் ஸ்டாலினை அவர் மதிப்பிட்டார் இது தெளிவு படுத்துகிறது.

 

மேலும் “……… சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு, லெனின் மற்றும் ஸ்டாலினின் சரியான சிந்தனைக்கும் டிராட்ஸ்கி, புகாரின் மற்றும் பிறரது தவறான சிந்தனைக்கும் இடையிலான முரண்பாடுகள் முதலில் ஒரு பகை முரண்பாடு வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை, ஆனால் பின்னர் அவை பகை முரண்பாடு ஆக வளர்ந்தன என்பதைக் காட்டுகிறது” என்று இரண்டையும் வேறுபடுத்திக் காட்டினார் தோழர் மாவோ. தவறான சிந்தனை மற்றும் பகை முரண்பாடு என்று தோழர் மாவோவினால் வர்ணிக்கப்பட்ட டிராட்ஸ்கிய சிந்தனை மற்றும் அதனைச் சுமந்த பகைமுரண்பாடு உடையவர்கள், மாவோவின் விமரிசனத்துக்குப் பின்னே தங்களது உண்மை முகத்தை ஒளித்துக் கொள்ள முற்படுகிறார்கள்.

 

இன்னொரு தருணத்தில் “சீன மக்களின் விடுதலை என்னும் லட்சியத்திற்கான உண்மையான நண்பர் ஸ்டாலின். கருத்து வேற்றுமைகளை விதைப்பதற்கான எந்த முயற்சியும், பொய்களும், அவதூறுகளும், ஸ்டாலின் மீதான சீன மக்களின் முழு மனதுள்ள அன்பையும், மரியாதையையும், சோவியத் யூனியனுக்கான நமது உண்மையான நட்பையும் பாதிக்காது” என்று தனது நிலைப்பாட்டை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். ஆனால் டிராட்ஸ்கியவாதிகளும், ஏகாதிபத்திய அடிவருடிகளும் இன்றுவரை அத்தகைய முயற்சிகளையும், பொய்களையும் மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள் என்பது மிகக் கேவலமான உண்மையாகும்.

 

இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் தோழர் மாவோ மேற்கண்ட தனது கருத்தில் அப்படியே உறுதியாக இருந்தார். அக்டோபர் சோசலிசப் புரட்சியின் முப்பத்தொன்றாம் ஆண்டு விழாவை ஒட்டி நவம்பர், 1948ஆம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரையில், சோசலிசப் புரட்சி வெற்றி பெற்றதன் முதல் ஆண்டு நிறைவை ஒட்டி தோழர் ஸ்டாலின் எழுதிய கட்டுரையை மேற்கோள் காட்டிய தோழர் மாவோ, “ஸ்டாலின் சுட்டிக்காட்டிய திசையில் தான் வரலாறு உருவாகியுள்ளது” என்று குறிப்பிட்டார். மேலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான புரட்சியாளர்களின் முன்னணி முதலில் லெனின் அவர்களாலும், அவரது மரணத்திற்குப் பிறகு ஸ்டாலின் அவர்களாலும் உருவாக்கப்பட்டது என்று புகழாரம் சூட்டினார். அக்டோபர் புரட்சி மற்றும் லெனினின் மரணத்திற்குப் பின்னர் அதனை முன்னெடுத்துச் செல்வது ஆகிய விசயங்களில் தோழர் ஸ்டாலினின் பங்களிப்பை தோழர் மாவோ எத்தனை ஆழமாக மதிப்பிட்டார் என்பதை நாம் காண்கிறோம். சீனப்புரட்சி முழு வெற்றியடைவதற்கு முந்தைய காலத்தில், சீனக் கம்யூனிஸ்டு கட்சி இன்னமும் தனது உள்நாட்டு எதிரிகளுடன் போராடிக் கொண்டிருந்த காலத்தில் தான் இந்தக் கருத்து வெளியானது என்பதைக் கவனிக்க வேண்டும்.

(தொடரும்)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...