வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

லெனினது கடிதமும் ஸ்டாலினும்

 லெனின் தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் மூன்று முறை பக்கவாத நோயினால் பாதிக்கப் பட்டார். தனது பேசும் திறனை இழந்தார், அவரது வலது பக்கம் முழுமையாக செயலிழந்தது.




மருத்துவர்களுடன் போராடி தினசரி சில நிமிடங்கள் தனது செயலாளர்களுக்கு உத்திரவுகளைப் பிறப்பிக்கும் உரிமையை வலுக்கட்டாயமாகப் பெற்றிருந்தார் லெனின். ஸ்டாலின் மருத்துவர்கள் அறிவுரைக்கு இணங்க கட்சி ஆவணங்கள் மற்றும் தகவல்கள் லெனினுக்குப் போகாமல் பார்த்துக் கொண்டார். ஆனால் லெனினது மனைவி மருத்துவர்களின் அறிவுரையை மீறி அவர் விரும்பிய ஆவணங்களைப் பெற்றுத் தந்தும், அவர் சொல்லச் சொல்ல கடிதங்களை எழுதியும் வந்தார்.

இதனால் ஒரு முறை அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டி இருக்கும் என்று ஸ்டாலின் எச்சரித்தது அவர்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தியது. மேலும் லெனின் மனைவியைத் தொலைபேசியில் அழைத்த ஸ்டாலின் அவரைக் கடுமையாகக் கண்டித்தார்.

இதுவும் லெனினது காதுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதனால் மனவருத்தம் அடைந்த லெனின் “எனது மனைவிக்கு எதிரான செயலை எனக்கு எதிரானதாகவும் நான் கருதுவேன். எனவே நீங்கள் சொன்னதைத் தவறென்று ஒப்புக் கொண்டு மன்னிப்புக் கேட்கப் போகிறீர்களா அல்லது நமக்கிடையே உள்ள உறவைத் துண்டித்துக் கொள்ளப் போகிறீர்களா என்பதைக் கவனத்துடன் நீங்களே முடிவு செய்யுங்கள்” என்று ஸ்டாலினுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறினார்.

இதற்கு உடனே பதிலளித்த ஸ்டாலின் “நான் கூறியதை வாபஸ் வாங்க வேண்டும் என்று நீங்கள் கருதினால் நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். ஆனால் என்ன பிரச்சினை, எனது தவறு எங்கே இருக்கிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்தார். லெனின் மனைவிக்கும் இது போன்ற மன்னிப்புக் கோரும் கடிதத்தை அவர் எழுதியதாகத் தெரிகிறது.

லெனினிடம் இருந்து வந்த மேற்கண்ட கடிதம் ஸ்டாலினுக்கு உண்மையில் உறுத்தலை ஏற்படுத்தியது. தனது வாழ்நாள் இறுதிவரை லெனினின் இந்தக் கடித்த்தை ஸ்டாலின் வைத்திருந்தார். அவர் மரணமடைந்த போது, அவரது மேசை டிராயர் ஒன்றில் அந்தக் கடிதம் காணப்பட்டது. (தகவல்கள் ஜோசப் ஸ்டாலின் வாழ்வும் காலமும் நூலில் இருந்து).

லெனின் அந்தக் கடிதத்தை எழுதியது மார்ச் 7, 1923

ஸ்டாலின் இறந்த தேதி மார்ச் 5, 1953

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...