ஞாயிறு, 12 ஜூலை, 2020

உக்ரேன் பஞ்சம் - உண்மை என்ன? - 2


ஹெர்ஸ்ட் செய்திக் குழுமத்தினரால் உக்ரேன் பஞ்சம் பற்றிய செய்திகள் பதிப்பிக்கப்பட்ட பின்னர், சோவியத் யூனியனில் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சில அமெரிக்கப் பத்திரிகையாளர்களே அந்தத் தகவல்கள் நம்பகமானவை அல்ல என்று மறுத்தனர். ஹெர்ஸ்ட் செய்திக் குழுமத்தின் மாஸ்கோ செய்தியாளராக இருந்த லிண்ட்சே பேரட் என்ற அமெரிக்கர், 1934ஆம் ஆண்டு உக்ரேனுக்கு நேரடியாகச் சென்ற போது பஞ்சத்திற்கான எந்த அறிகுறிகளும் இல்லை என்பதைக் கண்டார். இதைப் பற்றிக் குறிப்பிடும் ‘தி நேஷன்’ என்ற மற்றொரு அமெரிக்கப் பத்திரிகையின் செய்தியாளரான லூயி ஃபிஷர் என்பவர் ஹெர்ஸ்ட் நிறுவனங்களும் நாஜிக்களும் மிக நெருக்கமாக செயல்படத் தொடங்கி உள்ளனர் என்பதைக் குறிப்பிட்டார்.


இந்தப் பஞ்சத்திற்குச் சான்றாக பட்டினியால் உருக்குலைந்தவர்கள் என்று அந்தப் பத்திரிகைகள் வெளியிட்ட ஒரு சிறுமி மற்றும் அவளது இளைய சகோதரன் ஆகியோரது புகைப்படங்கள் 1922ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டவை என்பது நிரூபிக்கப்பட்டது. மற்றொரு புகைப்படம் முதலாம் உலகப் போரின் எடுக்கப்பட்டது என்பதும் பின்னர் நிரூபிக்கப்பட்டது. அந்தக் கட்டுரைகளை எழுதிய வால்கர் (Walker) (அவரது பெயரும் போலிப் பெயரே) தான் உக்ரேனில் கால்வைக்கவே இல்லை என்பதையும் பின்னர் ஒப்புக் கொண்டார். உக்ரேன் பஞ்சம் குறித்த முதலாவது “சான்றுகள்” இப்படித் தான் உருவாக்கப் பட்டன.

 

இது குறித்து இன்னொரு கட்டுரையை எழுதிய ஃபிரெட் பீல் (Fred Beal) என்பவர் சில காலம் உக்ரேனில் பணியாற்றியவர். பின்னர் அவருடன் உக்ரேனில் பணியாற்றிய சக ஊழியர்களே அவரது கட்டுரையில் கூறப்பட்ட தகவல்கள் பொய்யானவை என்பதை முற்றிலுமாக அம்பலப்படுத்தினர். மற்றவர்களின் உரையாடல்களை ஒட்டுக் கேட்பதன் மூலம் இத்தகைய தகவல்களைப் பெற்றதாக அவர் கூறிய அதே சமயம், அவருக்கு எந்த அளவுக்கு ரஷ்ய மற்றும் உக்ரேனிய மொழிகள் தெரியும் என்பதே கேள்விக்குறியாக இருந்தது!

 

உக்ரேன் பஞ்சம் குறித்த தகவல்களை அளித்தவர்கள் இது போன்ற “நிபுணர்கள்” ஆகவே இருந்தனர். மேலும் பலர் இட்லரின் நாஜி அரசுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புடையவர்களாக இருந்தனர்.

 

1935ஆம் ஆண்டு ருஷ்யாவில் மனித வாழ்க்கை என்ற பெயரில் டாக்டர் எவால்டு என்பவர் எழுதிய புத்தகம் இத்தகைய செய்திகளைக் கொண்டிருந்தது. அதில் பயன்படுத்தப்பட்ட புகைப்படங்கள் டாக்டர் டில்டோஃப் என்பவருடையவை ஆக இருந்தன. 1933 கோடைக்காலத்தில் இந்தப் படங்களைத் தான் எடுத்ததாக அவர் கூறினார். ஆனால் உண்மையில் அந்தச் சமயத்தில் அவர் நாஜி அரசின் விவசாயத் துறையில் பணியாற்றி வந்தார்! மேலும் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் என்று அவர் வெளியிட்ட இரண்டு சிறுவர்களின் புகைப்படங்கள் 1922ஆம் ஆண்டு ருஷ்யப் பஞ்சம் பற்றிய ஆவணப்படத்தில் இருந்து எடுக்கப்பட்டவை என்று நிரூபிக்கப்பட்டது.  இது போன்ற பித்தலாட்டங்களைப் பட்டியலிட்டால் அது மிக நீளமானதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

 

நாஜிக் கட்டுப்பாட்டில் செயல்பட்ட கலாச்சாரம் மற்றும் கல்வி அமைச்சகத்தில் பணியாற்றிய நிகோலஸ் பிரைசோத்கோ (நாஜிப் படைகள் பின்வாங்கிச் செல்லும் போது இவரைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்), நாஜிக்கள் கட்டுப்பாட்டில் இருந்த உக்ரேனில் விவசாயத்தை மறுசீரமைக்குமாறு பணிக்கப்பட்ட ஒட்டோ ஷில்லர் போன்றவர்கள் உக்ரேன் பஞ்சம் பற்றிய தகவல்களை அளிப்பதில் பங்காற்றிய இதர கூட்டாளிகள் ஆவர்.

 

1934ஆம் ஆண்டு நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் உக்ரேன் பஞ்சம் பற்றிக் குறிப்பிட்ட எவால்டு அமண்டே என்பவர் சுமார் 75 லட்சம் பேர்கள் உயிரிழந்தனர் என்று கூறினார். கீவ் நகரத் தெருக்களில் மக்கள் செத்துக் கிடக்கிறார்கள் என்றார் அவர். அதற்குச் சில தினங்களுக்குப் பிறகு அதே பத்திரிகைக்குக் கடிதம் எழுதிய அதன் மற்றொரு செய்தியாளர் ஹரோல்டு டென்னி என்பவர் எவால்டு அமண்டே குறிப்பிட்ட அதே சமயத்தில் தான் அங்கு இருந்ததாகவும், கீவ் நகரத்தில் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் கூடப் பட்டினி நிலவவில்லை, யாரும் சாகவில்லை. வெளிச்சந்தையில் எல்லா உணவுப் பொருட்களும் கிடைக்கின்றன, போதுமான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன, மக்கள் சிரித்து மகிழ்வாக இருக்கிறார்கள் என்றார்.

 

உண்மை இப்படி இருக்க, இந்தப் பஞ்சம் குறித்த பல கட்டுரைகளுக்குச் சான்றுகள் எதுவும் அளிக்கப்படவே இல்லை, சில கட்டுரைகளோ செய்தியாளர்கள் கேள்விப்பட்டதாகச் சொல்லப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மட்டுமே எழுதப்பட்டன, அவை பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகள் ஆகவே இருந்தன. உக்ரேன் பஞ்சம் உள்ளிட்ட பல நிகழ்வுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்த லுடு மார்டன்ஸ் (Ludu Martens), தனது நூலில் இது போன்ற பல அயோக்கியத் தனங்களை அப்பட்டமாகத் தோலுரித்துக் காட்டி இருக்கிறார்.

 

1940 மற்றும் 1950ஆம் ஆண்டுகளில் அமெரிக்க செனட்டர் மெக்கார்த்தி போன்றவர்கள் காலத்திலும், பின்னர் 1980ஆம் ஆண்டுகளில் அதிபர் ரீகன் காலத்திலும் இந்தக் குற்றச்சாட்டுகள், இதே போலியான “சான்றுகள்” மற்றும் இதை விட அபத்தமான “சான்றுகள்” ஆகியவற்றின் துணையுடன் மீண்டும் முன்வைக்கப்பட்டன.

 

உக்ரேன் பஞ்சத்தைக் கருவாக வைத்து Harvest of Despait என்ற படம் எடுக்கப்பட்டது, பின்னர் அதன் அடிப்படையில் ஒரு புத்தகமும் வெளியிடப் பட்டது. இவற்றில் உக்ரேன் படுகொலைகளைக் கண்ணால் கண்ட சாட்சி என்ற பெயரில் கூறியவர்கள் நாஜி ஆக்கிரமிப்பாளர்களும் அவருக்குத் துணையாக நின்றவர்களும் தான். மேலும் இந்தப் படத்தில் ஜார் ஆட்சிக் காலத்திலும், இரண்டாம் உலகப் போரின் போதும் எடுக்கப்பட்ட காட்சிகள் உக்ரேன் பஞ்சம் பற்றிய காட்சிகளாக இணைக்கப் பட்டிருந்தன. பின்னர் இவை கண்டு பிடிக்கப்பட்ட போது கடுமையான சர்ச்சையை எழுப்பின. அப்போது, இந்தப் படத்திற்குத் தேவையான ஆய்வுகளை மேற்கொண்ட மார்கோ கரின்னிக் என்பவர் இதில் பயன்படுத்தப் பட்ட காட்சிகள் 1932-33ஆம் ஆண்டுக்கால உக்ரேன் பஞ்சத்தின் போது எடுக்கப்பட்டவை அல்ல என்பதை ஒப்புக் கொண்டார். மேலும் இத்தகைய பிழைகளை ஏற்க முடியாது என்று தான் கூறிய போதிலும் தனது கருத்து புறக்கணிக்கப் பட்டது என்றும் அவர் கூறினார்.

 

இப்படியான பொய்யான கட்டுக்கதைகளைத் தவிர நம்பத்தகுந்த, உண்மையான, ஊர்ஜிதம் செய்யப்பட்ட தகுந்த சான்றுகள் எதுவும் முன்வைக்கப்படவில்லை.

 

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், உக்ரேன் பஞ்சம் என்பது நாஜிக்கள் திட்டமிட்ட முறையில் துவக்கி வைத்த, வெறித்தனமாக முன்னெடுத்த போர்க்காலப் பொய்ப் பிரச்சாரம் ஆகும். நாஜிக்களின் தோல்விக்குப் பிறகு, அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் விசுவாசமிக்க அடிமைகளும் அதனை இன்று வரையில் அதே போலிச் “சான்றுகள்” அடிப்படையில் முன்னெடுத்து வருகின்றனர். நாஜிக்களுக்கும் அவர்களுக்கும் அடிப்படை நோக்கம் ஒன்றாகவே இருந்தது, அது சோவியத் யூனியனையும் தோழர் ஸ்டாலினையும் அவதூறு செய்வது. மட்டுமே ஆகும்.

 

மேற்கண்ட “சான்றுகள்” தெளிவுபடுத்துவது ஒன்றை மட்டுமே. அதாவது, இந்தச் சான்றுகள் முற்றிலும் நம்பகத்தன்மை அற்றவை, அல்லது வேறொரு வரலாற்றுக் காலத்தில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக நடந்த உயிரிழப்புகளைத் திட்டமிட்டு திரித்துக் கூறப்பட்டவை, முற்றிலும் கற்பனையான “சான்றுகளை” அடிப்படையாகக் கொண்டவை, அல்லது உண்மைகளைப் பற்றிக் கவலைப்படாமல் கொஞ்சமும் அறிவியல் தன்மையற்ற முறையில் மனம் போன போக்கில் செய்யப்பட்ட கணிப்புகளை உண்மை என்ற பெயரில் முன்வைப்பவை ஆகும். இவை ஒவ்வொன்றுமே அடிப்படை நேர்மையற்ற மோசமான அரசியல் பித்தலாட்டங்கள் மட்டுமே என்பதை வலியுறுத்திச் சொல்லத் தேவையே இல்லை.

 

இன்று வரையில் உக்ரேன் பஞ்சம் குறித்து முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் இத்தகைய சான்றுகளின் அடிப்படையில் அமைந்தவை ஆகவே உள்ளன என்பது மிகக் கேவலமான உண்மை ஆகும்.

 

அன்றைய நாஜி அரசு, அதன் பிரச்சார இயந்திரம் மற்றும் சர்வதேச கம்யூனிச எதிர்ப்பு சக்திகளே இத்தகைய பிரச்சாரங்களை மேற்கொண்ட அனைவரையும் இணைக்கும் பொதுவான கண்ணியாக இருந்தது என்பதைப் பல சான்றுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கின்றன.

 

1926ஆம் ஆண்டு இட்லர் தான் எழுதிய ‘எனது போராட்டம்’ (Mein Kampf) என்ற நூலில் உக்ரேனை ஜெர்மானியர்களின் வாழும் இடம் (`lebensraum') என்று குறிப்பிட்டான். உக்ரேனைக் கைப்பற்றுவதும் அதைத் தான் உருவாக்க நினைத்த ஆரியப்பேரரசின் திட்டமிட்ட குடியேற்றப் பகுதி ஆக மாற்றுவதுமே அவனது முக்கியக் கனவாக இருந்தது. 1900ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் இருந்தே ஜெர்மன் ஆளும் வர்க்கத்தின் கனவாக இருந்த இந்தக் கோட்பாடு, கிழக்கு ஐரோப்பா முழுவதையும் ஜெர்மனியின் காலனியாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதை மோசமான வன்முறை மூலம் நடைமுறைப்படுத்த நாஜிக்கள் முயற்சித்தனர்.

 

ஆனால் 1917ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உருவான பிறகு, அதனை ஒழிக்காமல் தங்களது இந்தக் கனவை நிறைவேற்ற முடியாது என்பதை அப்போதைய ஜெர்மன் ஆட்சியாளர்கள் உணர்ந்தனர். இருப்பினும் தங்கள் கனவை அவர்கள் கைவிட்டு விடவில்லை. அதன் தொடர்ச்சியாக இட்லரின் நாஜிக் கூட்டம், சோவியத் யூனியனை வீழ்த்துவதைத் தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. நாஜிக்கள் எப்போதுமே பொய்ப்பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் தங்களது நோக்கத்தின் பெரும்பகுதியை நிறைவேற்றிக் கொள்வதை ஒரு வெற்றிகரமான உத்தியாகவே கையாண்டு வந்தனர் என்பது வரலாறு. எனவே, அத்தகைய முயற்சியின் ஒரு பகுதியாக 1934-35ஆம் ஆண்டுகளில் தாங்கள் கைப்பற்ற எண்ணிய உக்ரேன் பகுதிகளில் போல்ஷிவிக்குகள் நடத்திய ‘இனப்படுகொலை’ (genocide) குறித்த பொய்ப் பிரச்சாரத்தைத் துவக்கினர். “உக்ரைனின் திட்டமிட்ட 'விடுதலை'க்கு மக்களின் மனதைத் தயார்படுத்துவதே இதன் நோக்கமாக இருந்தது…… இந்தப் பொய் அதை உருவாக்கிய நாஜிக்களின் காலத்திற்குப் பிறகும் அமெரிக்காவின் ஆயுதமாக மாறியது……இப்படித் தான் ஸ்டாலினால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கானவர்கள் பற்றிய புனைகதைகள் உருவாகின” என்று லுடு மார்டன்ஸ் சரியாகவே குறிப்பிடுகிறார் (Ludu Martens, Another view of Stalin).

 

இந்தக் குற்றச்சாட்டுகள் எந்த நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப் பட்டன? முதலாவதாக, உக்ரேனைக் கைப்பற்றும் தனது செயல்திட்டத்திற்கு முன் தயாரிப்பு ஆக நாஜிக்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டனர். அங்கு சோவியத் யூனியன் திட்டமிட்ட படுகொலைகள் நடத்தி வருவதாகச் சித்தரித்து, உக்ரேனைக் காக்க வந்த காவலர்கள் என்று தம்மைச் சித்தரித்துக் கொள்வது அவர்களது நோக்கமாக இருந்தது. அதன் மூலம் தனக்கு எதிரான எதிர்ப்புகளைக் கணிசமாகக் குறைத்து முனை மழுங்கச் செய்து விடலாம் என்று நாஜிக்கள் நம்பினர். இரண்டாவதாக, இது போன்ற படுகொலைகள் பற்றிய செய்திகளை வெளியிடுவதன் மூலம் சர்வதேச அளவில் சோவியத் கம்யூனிஸ்டு கட்சி, தோழர் ஸ்டாலின் ஆகியோருக்கு எதிரான மனஉணர்வைத் தூண்டுவதற்கு அவர்கள் முயற்சித்தனர். மூன்றாவதாக, தாங்கள் நிகழ்த்திய மற்றும் இன்னும் நிகழ்த்தவிருக்கும் திட்டமிட்ட படுகொலைகள் குறித்த வெகுஜன கொந்தளிப்பு உணர்வை இது போன்ற படுகொலைகள் பற்றிய செய்திகள் வெகுவாகத் தணித்து விடும் என்று நாஜிக்கள் நம்பினர். இறுதியாக, இத்தகைய படுகொலைகள் பற்றிய செய்திகளைப் பரப்புவதன் மூலம் சர்வதேச அளவில் சோவியத் யூனியன் மீது பழி சுமத்தி, அதன் மூலம் மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெறலாம் என்று உறுதியாக நம்பினர்.


உக்ரேன் பஞ்சம், படுகொலை, இனப்படுகொலை என்று ஏகாதிபத்தியவாதிகளும், கம்யூனிச எதிர்ப்பாளர்களும் முன்வைக்கும் அவதூறுகளின் உண்மைப் பின்புலம் இப்படிப் பட்டதாகத் தான் இருக்கிறது. இந்த அவதூறுகளை உண்மை என்று எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் சோவியத் யூனியன் மற்றும் தோழர் ஸ்டாலினுக்கு எதிராக அவதூறுப் பிரச்சாரம் செய்பவர்கள் அரசியல் நோக்கங்கள் ஆய்வுக்குறியவை ஆகும்.


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...