ஞாயிறு, 12 ஜூலை, 2020

உக்ரேன் பஞ்சம் - உண்மை என்ன? - 1


 

1932-33ஆம் ஆண்டுகளில் அன்றைய சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக இருந்த உக்ரேனில் கடும் பஞ்சம் ஒன்று ஏற்பட்டது என்று கூறப்பட்டது. இந்தப் பஞ்சம் காரணமாக சுமார் 55 லட்சம் பேர்கள் உயிரிழந்தனர் என்று மேற்குலகப் பத்திரிகைகள் மற்றும் சோவியத் எதிர்ப்பாளர்கள் சிலர் குறிப்பிட்டனர். சிலர் சுமார் 70 லட்சம் பேர் உயிரிழந்தனர் என்று கூறினர், இன்னும் சிலரோ உயிரிழந்தவர் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் மேல் என்று கூறினர். அப்போதைய உக்ரேன் மொத்த மக்கள் தொகையே இரண்டரை கோடி மட்டுமே என்பதைப் பற்றிக் கூட அவர்கள் கவலைப்படவில்லை! இத்தகைய உயிரிழப்புகளுக்கு சோவியத் கம்யூனிஸ்டு கட்சியும், சோவியத் அரசும் - குறிப்பாக தோழர் ஸ்டாலினும் - காரணம் என்று ஏகாதிபத்திய ஆதரவாளர்களும் அவர்களது அடிவருடிகளும் குற்றம் சாட்டினர். இன்னும் சொல்லப் போனால், இந்தப் பஞ்சமே திட்டமிட்டு உருவாக்கப்பட்டது தான் என்பது போலவும் சித்தரித்தனர். இந்தக் கருத்தை வலுவாக நிலைநிறுத்த வேண்டும் என்பதற்காக இதற்கு பஞ்சப் படுகொலை (famine-genocide) என்றே பெயரிடப்பட்டது, இனப்படுகொலை என்றும் கூட அது குறிப்பிடப்பட்டது. இதற்கு தோழர் ஸ்டாலினைத் தனிப்பட்ட முறையில் அவர்கள் நேரடியாகத் குற்றம் சாட்டுவதும் நடைபெற்றது. 1930ஆம் ஆண்டுகள் முதல், டிராட்ஸ்கியவாதிகளும், தம்மை இடதுசாரிகளாகக் காட்டிக் கொள்ளும் சில ஸ்டாலின் எதிர்ப்பாளர்களும் கூடக் கிளிப்பிள்ளை போல இத்தகைய குற்றச்சாட்டுகளைத் திரும்பச் சொல்லி வருவதைக் காணலாம்.  தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகள் மற்றும் குற்றச்சாட்டுகளில் இன்று வரையிலும் கூட இது முக்கியமான ஒன்றாக இருந்து வருகிறது. ஆனால் இது பற்றிய உண்மை நிலை என்ன? உண்மையில் அங்கு என்ன தான் நடைபெற்றது என்பதை அறிய வேண்டுமானால் விரிவாக இதனைப் பார்க்க வேண்டி இருக்கிறது.

 

இதனைப் பற்றி விரிவாகக் காண்பதற்கு முன்னர், அப்போது நிலவிய சர்வதேச அரசியல் சூழல் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை அறிவது அவசியமாகிறது. அப்போது தான் இந்தப் பிரச்சினை குறித்த முழுமையான பார்வை நமக்குக் கிடைக்கும்.  ஸ்வீடன் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினரான மரியோ சௌசா என்பவர் எழுதிய ‘சோவியத் வரலாறு குறித்த கட்டுக்கதைகள்’ (Lies concerning the History of Soviet Union) என்ற கட்டுரையில் இச்சூழல் குறித்துப் பின்வருமாறு விளக்கியுள்ளார்:

 

ஹிட்லர் முதல் ஹெர்ஸ்ட், கான்குவெஸ்ட், சோல்னிட்சின் வரை தொடர்கிற ஒரு நேரடி வரலாற்று இணைப்பு உள்ளது. 1933 ஆம் ஆண்டு ஜெர்மனியில் ஏற்பட்ட அரசியல் மாற்றம், அடுத்த பல தசாப்தங்கள் வரை உலக வரலாற்றில் தனது அடையாளத்தை விட்டுச் சென்றது. ஜனவரி 30 அன்று ஹிட்லர் ஜெர்மன் பிரதமர் ஆனான், வன்முறை மற்றும் சட்டத்தை மதியாத ஒரு புதிய அரசாங்கம் வடிவம் பெறத் தொடங்கியது. ஆட்சி அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியை வலுப்படுத்துவதற்காக, நாஜிக்கள் மார்ச் 5 ஆம் தேதியன்று புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்தனர், வெற்றி பெறுவதற்கு தங்களால் இயன்ற அனைத்துப் பிரச்சார வழிமுறைகளையும் பயன்படுத்தினர். தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர், அதாவது பிப்ரவரி 27 அன்று, நாஜிக்கள் பாராளுமன்றக் கட்டிடத்திற்கு தீ வைத்தனர், அதற்கு கம்யூனிஸ்டுகள் தான் பொறுப்பு என்று குற்றம் சாட்டினர். அதைத் தொடர்ந்து நடந்த தேர்தல்களில், நாஜிக்கள் 17.3 மில்லியன் வாக்குகள் பெற்றனர் அவர்களது 288 பிரதிநிதிகள் வெற்றி பெற்றனர், மொத்த வாக்குகளில் சுமார் 48% வாக்குகள் பெற்றிருந்தனர் (நவம்பரில் அவர்கள் 11.7 மில்லியன் வாக்குகள் பெற்றிருந்தனர், அவர்களது பிரதிநிதிகள் 196 பேர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தனர்). கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட பின்னர், நாஜிக்கள் சமூக ஜனநாயகவாதிகளையும் தொழிற்சங்கவாதிகளையும் துன்புறுத்தத் தொடங்கினர், இடதுசாரி ஆண்கள் மற்றும் பெண்களால் முதலாவது வதை முகாம்கள் நிரம்பி வழியத் தொடங்கின. இதற்கிடையில் வலதுசாரிகள் உதவியுடன் பாராளுமன்றத்தில் இட்லரின் அதிகாரம் தொடர்ந்து வளர்ந்தது. மார்ச் 24 அன்று, ட்லர் பாராளுமன்றத்தில் ஒரு சட்டத்தை நிறைவேறச் செய்தான், அது பாராளுமன்றத்தைக் கலந்தாலோசிக்காமல் அடுத்த நான்கு ஆண்டுகள் நாட்டை ஆட்சி செய்வதற்கான முழுமையான அதிகாரத்தை அவனுக்கு வழங்கியது. அப்போது முதல் யூதர்களுக்கு எதிரான வெளிப்படையான துன்புறுத்தல் தொடங்கியது, கம்யூனிஸ்டுகள் மற்றும் இடது சமூக ஜனநாயகவாதிகள் ஏற்கனவே அடைத்து செய்யப்பட்டிருந்த வதை முகாம்களில் அவர்கள் அடைக்கப்பட்டனர். ஜெர்மனியின் ஆயுதமயமாக்கல் மற்றும் இராணுவமயமாக்கல் நடவடிக்கைகள் மீது கட்டுப்பாடுகள் விதிக்கும் 1918 சர்வதேச உடன்படிக்கைகளை கைவிட்ட ட்லர், முழுமையான அதிகாரத்தைப் பெறுவதற்கான தனது முயற்சியை முன்னெடுத்தான். ஜெர்மனியின் மறு ஆயுதமயமாக்கல் வெகு வேகமாக நடந்தது. சோவியத் யூனியனில் உயிரிழப்புகள் பற்றிய கட்டுக்கதைகளை முன்வைக்கப்படத் தொடங்கியபோது சர்வதேச அரசியல் அரங்கில் நிலவிய நிலைமை இதுதான்”. இந்த அரசியல் சூழலின் பின்புலத்தின் தான் உக்ரேன் பஞ்சம் குறித்த அவதூறுகளைக் காண வேண்டி இருக்கிறது.

 

பிப்ரவரி 18, 1935 அன்று, “சோவியத் யூனியனில் 60 லட்சம் பேர்கள் பட்டினியால் சாவு” என்ற தலைப்பில் சிகாகோ அமெரிக்கன் என்ற அமெரிக்கச் செய்தித்தாளில் கட்டுரை ஒன்று வெளியானது. உக்ரேன் பஞ்சம் பற்றிய மேற்குலகக் கட்டுக்கதைகளின் துவக்கப்புள்ளி என்று இதனைக் கூறலாம். அந்த செய்தித்தாள் வில்லியம் ரண்டல் ஹெர்ஸ்ட் என்பவருக்குச் சொந்தமானது. அமெரிக்காவில் மஞ்சள் பத்திரிகை உலகின் தந்தை என்று கருதப்பட்ட அவர், தொடர்ச்சியாகப் பரபரப்பான செய்திகளை வெளியிட்டு, அதன் மூலம் தனது வருமானத்தையும் தனக்குச் சொந்தமான பத்திரிகைகளின் வாசகர் எண்ணிக்கை மற்றும் சுற்று எண்ணிக்கை (circulation) ஆகியவற்றைப் பெருக்கிக் கொள்வது அவரது யுக்தியாக இருந்தது. பரபரப்பான செய்திகள் கிடைக்காத போது அத்தகைய செய்திகளை ‘ஏற்பாடு’ செய்து வெளியிடவும் அவர் தயங்கவில்லை! என்று மரியோ சௌசா குறிப்பிட்டார்.

 

வில்லியம் ரண்டல் ஹெர்ஸ்ட் 1935ஆம் ஆண்டில், 200 மில்லியன் டாலர்கள் சொத்து மதிப்பு உடைய உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக இருந்தார். 25 தினசரி செய்தித் தாள்கள், 24 வாரப் பத்திரிகைகள், 12 வானொலி நிலையங்கள் தவிர செய்தி நிறுவனங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியவை அவரது கட்டுப்பாட்டில் இருந்தன. அவரது செய்தித்தாள்கள் தினம் 13 மில்லியன் பிரதிகள் விற்பனை ஆகின, தினசரி 40 மில்லியன் மக்கள் அவரது செய்தித்தாள்களை வாசித்தனர். அமெரிக்க மக்களில் மூன்றில் ஒருவர் அவரது செய்தித்தாள் வாசகராக இருந்தனர் என்பது பத்திரிகை உலகில் அவரது வீச்சு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை உணர்த்தும்.

 

படுபயங்கர பழமைவாதியும், கம்யூனிஸ்டு எதிர்ப்பாளரும் ஆன வில்லியம் ஹெர்ஸ்ட், 1934ஆம் ஆண்டு ஜெர்மனிக்குச் சென்று இட்லரைச் சந்தித்து உரையாடினார். இதை அடுத்து ஹெர்ஸ்ட் நடத்திய ‘International News Service’ நிறுவனத்திடம் இருந்து சர்வதேசச் செய்திகளைப் பெறுவதற்கு இட்லரின் நாஜி ஜெர்மனி அவருடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக சோவியத் யூனியனுக்கு எதிரான மற்றும் குறிப்பாக ஸ்டாலினுக்கு எதிரான அவதூறுச் செய்திகளை அவர் வெளியிடத் தொடங்கினார். பல சமயங்களில் இத்தகைய கட்டுரைகள் நாஜி ஜெர்மனியின் கெஸ்டபோ காவல்துறையினர் அளித்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இட்லரின் பிரச்சார பீரங்கியாக இருந்த கோயபல்சின் பொய்களைச் சுமந்த கட்டுரைகளை வெளியிடவும் முயற்சித்த ஹெர்ஸ்ட் நிறுவனம், பின்னர் வாசகர்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக அதைத் திரும்பப் பெற வேண்டி இருந்தது. ஸ்டாலினைக் கொலைகாரர் ஆகச் சித்தரிக்கும் அவதூறுப் பிரச்சாரங்களின் துவக்கம் இப்படித் தான் இருந்தது. மனித குலம் இதுவரை கண்டிராத கொடூரக் கொலைகாரர்களின் கோயபல்சு வகைப் பொய்ப்பிரச்சாரத்தின் நன்கு திட்டமிடப்பட்ட ஒரு பகுதியே அது.

 

இந்தப் பின்னணியில் தான் சோவியத் யூனியனில் 60 லட்சம் பேர்கள் பட்டினியால் சாவு” என்ற கட்டுரையை ஹெர்ஸ்ட் பத்திரிகை வெளியிட்டது என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

இத்தகைய உயிரிழப்புகள் குறித்த குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை தான் என்ன? இந்தக் கேள்விக்கு விடை காண வேண்டுமானால், இதற்குச் சான்றாக முன்வைக்கப் படும் புகைப்படங்கள், “ஆய்வு”க் கட்டுரைகள், திரைப்படக் காட்சிகள், “நேரடி”ச் சாட்சியங்கள் ஆகியவற்றின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டியது அவசியமாகும்.


1 கருத்து:

  1. நல்ல முயற்சி; நல்ல தமிழ்நடை; விடாமல் தொய்வின்றி தொடர வாழ்த்துக்கள் தோழர்

    பதிலளிநீக்கு

  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...