வியாழன், 6 அக்டோபர், 2022

 

சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து

 

ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட்டத்தின் போது, அந்நாட்டு சமூக ஜனநாயகவாதிகள் குறித்து ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி மேற்கொண்ட நிலைப்பாடு குறித்து அவதூறுப் பிரச்சாரம் ஒன்றை டிராட்ஸ்கியவாதிகள் பல காலமாக நடத்தி வருகிறார்கள். தன்னை டிராட்ஸ்கியவாதியாக அடையாளப் படுத்திக் கொள்ள வெட்கப்படும், கம்யூனிச அடையாளம் சுமந்த சிலர் அந்த அவதூறுப் பிரச்சாரத்தைத் தற்போதும் மேற்கொண்டு வருகின்றனர்.

 

சரி அந்த அவதூறு தான் என்ன?



  1. ஜெர்மன் நாஜிக்கட்சிக்கு எதிரான போராட்ட காலத்தில் அந்நாட்டு சமூக ஜனநாயகவாதிகளையே முதன்மை எதிரிகள் என்று அந்நாட்டுக் கம்யூனிஸ்டு கட்சி வரையறுத்தது, அவர்களை நோக்கியே தனது போராட்டத்தை நடத்தியது
  2. அதன் காரணமாக நாஜிக்களுக்கு எதிரான போராட்டத்தில் சுணக்கம் ஏற்பட்டது, நட்பு சக்திகள் ஒன்றுடன் ஒன்று மோதி சுயஅழிவுக்கு வித்திட்டன
  3. நாஜிக்கள் வெற்றி பெற்றதற்கு ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் தற்கொலைக்கு ஒப்பான இந்தத் தவறான நிலைப்பாடு தான் காரணம்
  4. அன்றைய சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் தவறான வழிகாட்டுதலின் பேரிலேயே ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி தவறான நிலையை மேற்கொண்டது,
  5. அன்றைய சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் தலைவராக இருந்த ஸ்டாலின் தான் இந்த வரலாற்றுத் தவறுக்கு அடிப்படைக் காரணம் ஆவார்.

 

இதுவே அவதூறான அந்தக் குற்றச்சாட்டின் சாரம் ஆகும்.

 

இது பற்றிய வரலாற்று உண்மைகளை நாம் தெளிவாக அறிந்து கொண்டால் மட்டுமே உண்மைச் சித்திரத்தை அறிந்து கொள்ள முடியும் என்பதால் அதனைச் சற்று விரிவாகப் பார்க்க வேண்டியுள்ளது.

 

முதலாவதாக, சமூக ஜனநாயகவாதிகளையே முதன்மை எதிரிகள் என்று வரையறுக்கும் படி ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஸ்டாலின் தான் வழிகாட்டினாரா? இவ்வாறு குற்றம் சாட்டும் டிராட்ஸ்கியவாதிகள் அத்தகைய நேரடிச் சான்று எதையும் தெளிவாக முன்வைப்பது இல்லை. ஒரு வேளை அப்படிச் செய்வது அவர்களுக்கு வசதியாக இருக்கும் என்பதே இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். … ஜினொவியேவ்இது குறித்த சான்றுகளை இணைக்க வேண்டும். அப்படி இருக்கும் போது  ஜினெவியேவ் பெயரைக் கூடக் குறிப்பிடாமல் ஸ்டாலினை மட்டும் குறிப்பாகக் குற்றம் சாட்டுவது யாரைத் திருப்திப் படுத்துவதற்காக

 

இரண்டாவதாக, சோவியத் கம்யூனிஸ்டு கட்சி ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியைத் தவறாக வழிநடத்தியது என்றால், அன்றைய ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி என்ன ஆட்டு மந்தைகளால் நடத்தப்பட்டதா? ஒருவேளே சோவியத் கம்யூனிஸ்டு கட்சி அவ்வாறுதவறாக வழிநடத்தியது என்ற அபத்தக் குற்றச்சாட்டை ஒரு வாதத்திற்காக ஒப்புக் கொள்வதாக வைத்துக் கொண்டால், அவ்வாறு தவறாக வழிகாட்டும் சோவியத் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமையை ஏற்றுச் செயல்பட்ட மூன்றாம் அகிலத்தைக் கலைத்தது ஒரு புரட்சிகர நடவடிக்கையாகத் தானே இருக்க வேண்டும்? அது உலகப் புரட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்வதாக இருந்திருக்க வேண்டும் இல்லையா? அப்படி இருக்கும் போது மூன்றாம் அகிலத்தைக் கலைத்த ஸ்டாலினை (அப்படித் தான் அவர்கள் சொல்கிறார்கள்!!!) குற்றம் சாட்டுவதும், அது உலகப் புரட்சிக்குப் பின்னடையை ஏற்படுத்தியது என்று சாடுவதும் கோமாளித்தனமான வாதம் இல்லையா?

 

மூன்றாவதாக, சமூக ஜனநாயகவாதிகளை முதலாம் எதிரி  என்று வரையறுத்தது தவறு, மாறாவ அவர்களுடன் இணைந்து ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி நாஜிக்களுக்கு எதிராகப் போராடி இருக்க வேண்டும் என்னும் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமான ஒன்று என்பதால் அது பற்றி சற்று விரிவாகப் பார்க்க வேண்டும்.

 

நாஜிக்களுக்கு எதிரான போராட்டத்தில் நாஜி எதிர்ப்பு சக்திகள் ஒன்று பட்டிருக்க வேண்டும் என்பதில் நமக்கு எந்த மாறுபட்ட கருத்தும் இருக்க முடியாது. ஆனால் அவ்வாறு ஒரு ஐக்கியம் ஏற்பட்டிருக்க வேண்டுமென்றால் கம்யூனிஸ்டு கட்சிமேமட்டுமின்றி, சமூக ஜனநாயகவாதிகளும் அத்தகைய விருப்பம் கொண்டிருந்தால்நாஜிக்களுக்கு எதிராகப் போராடத் தயாராக இருந்தால்மட்டுமே அது சாத்தியமாகி இருக்கும். அவர்களது நிலைப்பாடுகள், அரசியல் செயல்பாடுகள் எப்படிப் பட்டவையாக இருந்தன? அவர்களுடனான ஒற்றுமையைச் சாத்தியமாக்கும் வகையில் இருந்தனவா?

 

ஐரோப்பாவின் பழமையான இடதுசாரிக்கட்சிகளில் ஒன்றான ஜெர்மன் சோசலிஸ்டு கட்சி 1920 மற்றும் 1930களில் ஜெர்மனியின் பிரதான அரசியல் கட்சிகளுள் ஒன்றாகவும், ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியை விட வலிமையானதாகவும், ஜெர்மனியின் பல பிராந்தியங்களில் அரசதிகாரத்தைக் கைக்கொண்டதாகவும் இருந்தது. 1929ஆம் ஆண்டு நடைபெற்ற ஜெர்மன் தேர்தல்களில் ஜெர்மன் சோசலிஸ்டு கட்சி 153 தொகுதிகளிலும், ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி 54 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன. இதுவே அன்றைய ஜெர்மனியின் பிரதான சமூக ஜனநாயகக் கட்சியாக இருந்தது. நாஜிக்கள் ஜெர்மன் அரசியலில் தொடர்ந்து முக்கியத்துவம் பெற்று முன்னிலைக்கு வந்து கொண்டிருந்த கால கட்டம் இது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

ஜெர்மன் சோசலிஸ்டு கட்சி தன்னை ஒரு இடதுசாரிக் கட்சியாக அடையாளப்படுத்திக் கொண்ட போதிலும், ஜெர்மானிய அரச அடையாளங்களைத் தக்க வைப்பதில் பெருத்த விருப்பமுடையதாகவும் சட்டவாதத்திற்கு மாறாத விசுவாசம் கொண்டதாகவும் இருந்தது. அது வெய்மர் குடியரசைப் பாதுகாப்பதையே தனது முதன்மைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது. ஆகவே, முதலாளித்துவ அரசமைப்பைத் தூக்கியெறிய வேண்டுமென்ற முனைப்போடு வர்க்கப் போராட்ட அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்த ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சிக்கும் அதற்கும் இடையிலான உறவுகள் கொந்தளிப்பானதாக அமைந்திருந்ததில் வியப்பேதும் இல்லை.

 

ஜெர்மன் அரசியலில் புரட்சிகர அரசியல் கண்ணோட்டத்தைக் கைவிட்டு சமூக ஜனநாயகவாத சட்டவாத நிலைப்பாட்டை மேற்கொண்ட ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி, நாஜிக்களுக்கும் முன்னதாகவே ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராக அரச வன்முறையையும் படுகொலைகளையும் பயன்படுத்தியது!!.இந்தக் காரணத்தால் கம்யூனிஸ்டு அகிலம் அக்கட்சியை சமூக பாசிசம் என்றே அடையாளப்படுத்தியது. அன்றைய சில நிகழ்வுகளை நினைவு கூர்ந்தால் ஜெர்மன் சோசலிஸ்டு கட்சி ஒரு அபாயகரமான சமூக ஜனநாயகக் கட்சியாக இருந்தது, அதனை சமூகப் பாசிசம் என்று வரையறுத்த கம்யூனிஸ்டு அகிலத்தின் நிலைப்பாடு முற்றிலும் சரியானதே என்பதை உணர முடியும்.

 

1929 மே முதல் நாள் அன்று உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு அமைதியான மாபெரும் வீதி ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரங்கக் கூட்டங்கள் ஆகியவற்றை நடத்துமாறு ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி அழைப்பு விடுத்தது. ஜெர்மன் சோசலிஸ்டு கட்சி அரசு இதற்குத் தடை விதித்தது மட்டுமின்றி இந்த அமைதியான ஆர்ப்பாட்டங்களைக் கூடக் கடுமையான ராணுவ முறைகளைக் கொண்டு நசுக்க முயற்சித்தது

 

ஜெர்மன் சோசலிஸ்டு கட்சியின் கட்டுப்பாட்டில் இருந்த பெர்லின் காவல்துறை மே தினக் கொண்டாட்டங்களில் ஈடுபட்ட அமைதியான கூட்டங்களில் பங்கு பெற்றவர்களைக் குண்டாந்தடிகளால் கடுமையாகத் தாக்கியது. ஆத்திரமூட்டல்கள் எதுமின்றிக் கண்டுமூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த நிகழ்வுக்குத் தொடர்பேதும் அற்ற அப்பாவிகள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கொல்லப்பட்டனர்ஜெர்மன் கம்யூனிஸ்டுகளின் எதிர்க்குரலை முடக்கும் விதமாக கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகைக்குத் தடை விதிக்கப் பட்டது

 

ஜெர்மன் சோசலிஸ்டு கட்சியின் இந்தக் கொலைபாதகச் செயலுக்கு எதிராக  மே 2 அன்று ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது கம்யூனிஸ்டு கட்சி. பல்லாயிரக் கணக்கான மக்கள் அதில் பங்கேற்று தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர் அமைப்பான RFB மற்றும் அதன் இளைஞர் அமைப்பான RJ ஆகியவை பிரஷ்யப் பகுதி முழுவதும் சட்டவிரோதமாக்கப் பட்டன. கம்யூனிஸ்டு தொண்டர்களை வீடு புகுந்து கைது செய்தது காவல்துறை. ஜெர்மன் சோசலிஸ்டு கட்சியின் மேற்கண்ட நடவடிக்கைகளை அன்றைய முதலாளித்துவப் பத்திரிகைகள் கூட வன்மையாகக் கண்டித்தன. தன்னை சோசலிஸ்டு என்று அறிவித்துக் கொண்ட சமூக ஜனநாயகக் கட்சியான ஜெர்மன் சோசலிஸ்டு கட்சி தொழிலாளர்களின் சிறப்புமிக்க கொண்ணடாட்டமான மேதினக் கொண்டாட்டத்தை ரத்தம் சிந்தி அடக்கியது. இது தான் சமூக ஜனநாயகத்தின் உண்மை முகமாகும்

 

இவ்வாறு நாஜிக்கள் ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சிக்கு எதிராகப் பாசிசக் கொலைகளை முன்னெடுப்பதற்கும் முன்னரே அத்தகைய செயல்களில் ஈடுபட்டது தான் ஜெர்மன் சோசலிஸ்டு கட்சி. நாஜிக்களைக் காட்டிலும் கம்யூனிஸ்டுகளையே தனது பிரதான எதிரியாக அது அடையாளப் படுத்திக் கொண்டதே இதற்குக் காரணம்.

 

இந்த நிகழ்வில் மட்டுமின்றி, ஜெர்மன் சோசலிஸ்டு கட்சி பல்வேறு வகைகளில் நாஜிக்களுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் தொடர்ந்து உதவியளித்தே வந்துள்ளது  என்பதை அன்றைய ஜெர்மன் அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.

 

நாம் மேலே குறிப்பிட்ட மேதினக் கூட்டத்தின் மீது துப்பாக்கி சூடு நடத்த உத்திரவித்தவர் சோசலிஸ்டு கட்சியைச் சேர்ந்த காவல்துறைத் தலைவராக இருந்த ஜோர்கிபெல் என்பவரே. ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் துணை ராணுவ அமைப்பான RFB மீது தடை விதித்தது சோசலிஸ்டு கட்சியைச் சார்ந்த உள்துறை அமைச்சராக இருந்த செவரிங் என்ற சமூக ஜனநாயகவாதி தான். பொதுக் கூட்டங்களில் பேசுவதற்கு நாஜித் தலைவன் இட்லருக்கு விதிக்கப் பட்டிருந்த தடையை விலக்கி உத்திரவிட்டான் ஜெர்மன் சோசலிஸ்டு கட்சியைச் சேர்ந்த பிரஷ்ய உள்துறை அமைச்சராக இருந்த க்ரெசின்ஸ்கி என்பவன். அது யாருக்குப் பயனளிப்பதாக இருந்தது என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஜெர்மன் சோசலிஸ்டுக் கட்சி கம்யூனிஸ்டுகளைத் தனக்கு அச்சுறுத்தல் ஆகவும் நாஜிக்களை அதற்கு எதிரான சக்தியாகவும் கண்டது என்பதே இதற்குக் காரணம். அன்றைய ஜெர்மன் அதிபராக இருந்த ஹெர்மன் முல்லர், பிரதமர் ஒட்டோ பிராவுன் போன்ற ஜெர்மன் சோசலிஸ்டு கட்சித் தலைவர்களும் தீவிர கம்யூனிஸ்டு எதிர்ப்பாளர்களாகவே இருந்தனர்.

 

1930ஆம் ஆண்டு குடியரசைப் பாதுகாப்பதற்கான சட்டம் என்ற அடக்குமுறைச் சட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்கு ஆதரவாக ஜெர்மன் சோசலிஸ்டு கட்சி வாக்களித்தது. கம்யூனிஸ்டு கட்சி சார்ந்த நகர மேயர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டு, ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது

 

இப்படியாக ஜெர்மன் சோசலிஸ்டு கட்சியின் உழைக்கும் மக்களுக்கு எதிரான, கம்யூனிஸ்டு விரோதச் செயல்பாடுகளின் அவமானகரமான வரிசை இன்னும் நீள்கிறது. இட்லருக்கு அரசதிகாரத்தை முழுமையாகக் கையளிக்கும் சட்டப்பிரிவு 48 என்னும் சட்டத் திருத்தத்திற்கு அக்கட்சி ஆதரவளித்தது! 1932ஆண்டில் நெருக்கடியான அரசியல் சூழலில் இட்லரை அதிபராகத் தேர்ந்தெடுத்தவர் ஆன மார்ஷல் ஹிண்டென்பர்க்-- பதவிக்குக் கொண்டு வந்த 1932ஆம் ஆண்டுத் தேர்தலுக்கு பிரதான காரணியாக இருந்தது. ADGB தொழிற்சங்கத்தில் இருந்து ஏராளமான கம்யூனிஸ்டு ஆதரவுத் தொழிலாளர்களை வம்படியாக நீக்கியது அக்கட்சி

 

இது மட்டுமின்றி ஜூலை 17, 1932 அன்று ஜெர்மனியின் ஹாம்பர்க் மாகாணத்தில் நாஜிக்கள் நடத்தவிருந்த அணிவகுப்பைத் தடுக்க முயன்றது ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி. உடனே களத்தில் இறங்கிய ஜெர்மன் சோசலிஸ்டு கட்சி அரசின் இயந்திரத் துப்பாக்கிப் படை, நாஜி அணிவகுப்பைத் தடுத்து நிறுத்த முயன்ற கம்யூனிஸ்டுகள் மீது கண்மூடித் தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியது. நாஜி அணிவகுப்பைத் தடுத்து நிறுத்த முயன்ற 17 கம்யூனிஸ்டுகள் கொல்லப்பட்டனர். எக்கர்ஸ்டாட் என்ற சமூக ஜனநாயகவாதியே இந்த இயந்திரத் துப்பாக்கிப் படையின் தலைவராக இருந்தார். இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், சமூக ஜனநாயகம் என்பது உண்மையில் பாசிசத்தின் மிதவாதப் பிரிவு மட்டுமே, இந்த அமைப்புகள் ஒன்றை ஒன்று மறுப்பவை அல்ல, மாறாக ஒன்றுக்கு ஒன்று உதவி புரிபவை மட்டுமே என்று 1924ஆம் ஆண்டு ஸ்டாலின் கூறியது எத்தனை தீர்க்கதரிசனம் கொண்ட மதிப்பீடு என்பதை உணர முடிகிறது.

 

பெயரில் மட்டுமே சோசலிசத்தைச் சுமந்து, நடைமுறையில் உழைக்கும் மக்களுக்கு எதிராக நாஜி ஆதரவு பித்தலாட்ட அரசியல் நடத்திய ஜெர்மன் சோசலிஸ்டு கட்சி என்னும் சமூக ஜனநாயகக் கட்சி, மே தின ஊர்வலம் நடத்த முற்பட்ட தொழிலாளர்களைக் கொலை செய்த கட்சி, நாஜி அணிவகுப்பைத் தடுக்க முற்பட்ட கம்யூனிஸ்டுகளை ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்ற கட்சி, கம்யூனிஸ்டு கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகையைத் தடை செய்த கட்சி, கம்யூனிஸ்டு கட்சியின் அலுவலகத்திற்கு சீல் வைத்த கட்சி, அரசியலில் யாருடைய நலன்களைப் பிரதிபலிக்க முயற்சித்தது? கம்யூனிஸ்டுகள் பிரதிநிதித்துவப் படுத்த முயற்சிக்கும் உழைக்கும் மக்களையா, அல்லது அவர்களை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்து ஒடுக்க நினைத்த பாசிஸ்டுகளையா? என்பது வாசகர்களுக்குத் தெளிவாக விளங்கும்.

 

ஜெர்மன் சோசலிஸ்டு கட்சி சமூக ஜனநாயகவாதிகளின் பாசிசத்திற்கு முன் மண்டியிடும் அவமானகரமான வரலாறு இத்துடன் முடிந்து விடவில்லை. அதன் அசிங்க வரலாற்றுத் தொடர்ச்சி மேற்கண்டதை விடக் காறித்துப்பத் தக்கது.

 

இட்லர் ஜெர்மன் அதிபராகப் பதவி ஏற்றுக் கொண்ட சுமார் ஒரு மாத காலத்திற்குப் பின்னர், 27 பிப்ரவரி 1933 அன்று ஜெர்மன் பாராளுமன்றக் கட்டிடமான ரீய்ச்ஸ்டாக் தீயிடப்பட்டது. ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி தான் இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டிய இட்லர்--கோயபல்சுக் கூட்டம் ஜெர்மன் அரசைத் தூக்கியெறிவதற்கு கம்யூனிஸ்டுகள் முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியது. இதனைக் காரணம் காட்டி மக்களது சிவில் உரிமைகளை மறுத்து, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக ஈவிரக்கமற்ற மோதலைக் கடைப்பிடிப்பதான ரீய்ச்ஸ்டாக் தீயிடல் குறித்த ஆணையை வெளியிட்டது. ஜார்ஜ் திமித்ரோவ் போன்ற கம்யூனிஸ்டு தலைவர்களும், கம்யூனிஸ்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். ஜெர்மன் நாடெங்கும் சிறைச்சாலைகளும் சித்திரவதை முகாம்களும் அவசரமாக அமைக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான கம்யூனிஸ்டுகள் கைது செய்யப்பட்டு சொல்லொணாச் சித்திரவதைகளுக்கு ஆளாகினர், மனித உணர்வுகளற்ற வகையில் கேவலமாகக் கொல்லப்பட்டனர். இவை அனைத்தும் அடுத்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் நாஜிக் கட்சி வெற்றி பெறுவதற்குப் பேருதவியாக இருந்தது. உண்மையில் இந்தத் தீயிடல் சம்பவத்தில் ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சிக்கு எந்தத் தொடர்பும் இருக்கவில்லை. மாறாக கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்டுவதற்காக இது கோயபல்சு கூட்டம் தீட்டிய சதியாகவே இருந்தது. பின்னாளில் இது குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இதனை ஐயத்திற்கு இடமின்றித் தெளிவு படுத்தின.

 

ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியை ஒழித்துக் கட்டுவதற்கான நாஜிக்களின் முயற்சியில் இது முக்கியமானதொரு மைல்கல் ஆக இருந்தது என்பதால், இது குறித்த விசயத்தில் ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகளின் நிலைப்பாடு எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை அறிவது மிகவும் அவசியம் இல்லையா?

 

பாராளுமன்றக் கட்டிடத்திற்குத் தீயிட்டதான போலிக் குற்றச்சாட்டின் கீழ் கம்யூனிஸ்டு கட்சியை ஒழித்துக் கட்டுவதற்கு நாஜிக்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி ஒரு பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. இந்த வேலைநிறுத்தம் மற்றும் அதன் தாக்கம் குறித்து இட்லர் வெகுவாக அஞ்சினான் என்பதை  கோயபல்சின் நாட்குறிப்புகள் உறுதி செய்தன. இதற்குப் பின்னர் நடைபெற்ற இட்லர் அமைச்சரவைக் கூட்டம் இந்த ஒற்றை விசயத்தைப் பற்றி மட்டுமே விவாதித்தது

 

பாராளுமன்றக் கட்டிடத்திற்குத் தீயிட்டதாக போலியான குற்றச்சாட்டின் கீழ் ஜெர்மன் கம்யூனிஸ்டு தலைவர்கள் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட போது, அதற்கு சமூக ஜனநாயகவாதக் கட்சியான ஜெர்மன் சோசலிஸ்டு கட்சி ஆதரவளித்தது. அத்துடன் சோசலிச அகிலத்தில் இருந்து தன்னைத் துண்டித்துக் கொண்டது மட்டுமின்றி, நாஜிக்களின் வெளியுறவுக் கொள்கைக்கு வெட்கமற்ற வகையில் ஆதரவளித்தது. ஜெர்மன் சோசலிஸ்டு கட்சியைச் சேர்ந்த சில தலைவர்கள் நாஜி அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெற்று மகிழ்ந்தார்கள்!! ரோசா லக்சம்பர்க் மற்றும் கார்ல் லீப்ஃனெட் போன்ற உன்னதமான கம்யூனிஸ்டு தலைவர்களைக் கொலை செய்வதற்குத் தலைமை ஏற்று நடத்திய நோஸ்கே போன்றவர்களும் நாஜிக்களின் பூட்சை நக்கிப் பலன்பெற்ற மகானுபாவர்களின் பட்டியலில் அடங்குவர்

 

சோசலிஸ்டு கட்சியின் உள்ளாட்சி அமைப்புகளைக் கலைத்து விட்டு நாஜிக்களுக்கு ஆதரவளிக்கும் படி அக்கட்சியின் சில அமைப்புகள் உத்திரவிட்டன. அக்கட்சியின் நிதி நாஜிக்கள் வசம் சென்று சேராதவாறு தடுக்க முயற்சித்த இளைஞர் அமைப்பு உறுப்பினர் முயற்சித்த போது, அத்தகைய சட்டவிரோத நடவடிக்கைகளை நிறுத்துமாறு கட்சி அவர்களுக்கு உத்திரவிட்டது. வையெல்லாம் வரலாற்றுப் பக்கங்களில் இடம் பெற்றுள்ள மறுக்கவியலாத உண்மைகள் ஆகும்

 

வர்க்கப் போராட்டத்தை முன்னெடுத்த போர்க்குணமிக்க நடவடிக்கைகளை வன்முறையால் நசுக்குவதற்கும், அன்றைய அரசதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஜெர்மன் சோசலிஸ்டு கட்சி இதர முதலாளித்துவக் கட்சிகளுக்கும்ஏன் நாஜிக் கட்சியை விடவும்எந்த விதத்திலும் சளைக்கவில்லைஅக்கட்சியின் தொழிற்சங்கப் பிரிவு தன்னைத் தானே கலைத்துக் கொண்டு நாஜித் தொழிற்சங்கப் பிரிவுடன் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டது….

 

இவை தான் அன்றைய ஜெர்மன் சோசலிஸ்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்த சுருக்கமான ஒரு வரலாற்றுச் சித்திரம் ஆகும். ஜெர்மன் சமூக ஜனநாயகவாதிகள் நாஜிக்களை எதிர்த்துப் போராடுவதற்குச் சிறிதும் மனவிருப்பம் அற்றவர்களாக இருந்தனர். அளவுக்கு அதிகமான சட்டவாதக் கண்ணோட்டம் அவர்களது கண்களை மறைத்தது என்பதே இதற்கு அடிப்படைக் காரணமாகும். கம்யூனிஸ்டுகள், அவர்களது அரசியல், அதற்குப் பின்புலமாக அமைந்த வரலாற்றுப் புரிதல், அவர்கள் கொண்டு வர முயற்சித்த சமூக மாற்றம் ஆகிய அனைத்துக்கும் எதிரானவர்களாக இருந்தனர் சமூக ஜனநாயகவாதிகள். அன்றைக்கு நிலவிய  Status quoவைத் தூக்கிப் பிடித்து, நாஜிக்களின் அதிகரித்து வந்த ஒடுக்குமுறைத் தாக்குதல்களைப் பின்னுக்குத் தள்ளி, நாஜிக்களின் வன்முறைத் தாக்குதலுக்கு ஏற்கனவே உள்ளாகி இருந்த  ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியை அழிக்கத் தானும் இயன்றது ஜெர்மன் சோசலிஸ்டு கட்சி. அமைதியான வழியில் மே தினம் கொண்டாட முயற்சித்த கம்யூனிஸ்டுகள் மீது காரணமற்ற வன்முறையைக் கட்டவிழ்த்து, ரத்த ஆறு ஓடவைத்த சமூக ஜனநாயகவாதிகளின் செயல்கள் நாஜிக்கள் முகாம்களில் மட்டுமே புன்னகையை மலரச் செய்திருக்கும்

 

இந்த வரலாற்றுப் பின்னணியில் தான் சமூக ஜனநாயகவாதிகளை முதன்மை எதிரிகளாக வரையறுத்த ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். இது பற்றிய எந்தப் புரிதலும் இன்றி சமூக ஜனநாயகவாதிகளுடன் போராடியது தவறென்று பேசுவது அரசியல் அரிச்சுவடி கூட அறியாத ஒன்றாகவே இருக்க முடியும் இல்லையா?

 

சமூக ஜனநாயகவாதிகளை முதன்மை எதிரி என்று வரையறுத்த ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் நிலைப்பாட்டை சரியென்று மெய்ப்பிக்க வேண்டிய கடமையைக் கூட கம்யூனிஸ்டு கட்சியின் தலையில் சுமத்தவில்லை அவர்கள். தங்களது நாஜி ஆதரவு கொலைபாதகச் செயல்கள் மூலம் தன்னைத் தானே அம்பலப் படுத்திக் கொண்டது அக்கட்சி.

 

இத்தனைக்குப் பிறகும் நாஜிக்கள் வலிமை பெற்று வந்த சமயத்தில் சமூக ஜனநாயகவாதிகள் குறித்த நிலைப்பாட்டில் ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சி தவறிழைத்தது என்று பேசுபவர்களின் நோக்கம் என்னவாக இருக்க முடியும்?

 

நாஜிக்களின் வளர்ச்சிக்கு சமூக ஜனநாயகவாதிகள் ஆற்றிய பங்களிப்பை மறைப்பதுஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் வீரம் செறிந்த நாஜி எதிர்ப்புப் போராட்டத்தைப் பின்னுக்குத் தள்ளி அதை முதன்மைக் குற்றவாளி ஆக்குவதுநாஜிக்களை முதன்மைக் குற்றவாளிகள் என்னும் குற்றச்சாட்டில் இருந்து விடுவிப்பது

 

இந்த அவதூறுகளை முன்வைப்பவர்கள் இதைத் தான் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த அவதூறாளர்களின் செயல்பாடுகளால் பயனடைபவர்கள் யார்? உறுதியாக நாஜிக்களுக்கு எதிராக சமரசமின்றிப் போராடிய கம்யூனிஸ்டுகள் கிடையாது. மாறாக, உலகெங்கும் தலைதூக்கி வரும் நாஜிசக் கூட்டம் மட்டுமே ஆக இருக்கமுடியும்.

 

கம்யூனிசப் போர்வையில் அத்தகைய வேலையை ஒரு கூட்டம் செய்து கொண்டிருக்கிறது.




******** 

 



  சமூக ஜனநாயகவாதிகளுக்கு எதிரான ஜெர்மன் கம்யூனிஸ்டு கட்சியின் போர்த்தந்திரம் குறித்து   ஜெர்மனியில் நாஜிக்களுக்கு எதிரான போராட...